×

வணிக லாபத்திற்காக ரசாயனம் கலக்கின்றனர் கலப்பட உணவு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நுகர்வோர் சங்கம் வேண்டும்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை : கலப்பட உணவுப் பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நுகர்வோர் சங்கம் உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் உலக நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான உணவு மற்றும் கலப்பட உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  அதனைத்தொடர்ந்து, தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசியதாவது:

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும், பீட்சா, பர்கர் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்வதால் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நவீன உணவுப்பழக்கம் என்கிற பெயரில் வியாபார லாபத்திற்காக பலவிதமான உணவுகள் தயாரித்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.

அதிக பணம் செலவழித்து பீட்சா வாங்குவதற்கு மாற்றாக பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். காலையில் குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகளை சாப்பிட கொடுக்க வேண்டும். செயற்கையாக தயாரிக்கப்படும் ஜீஸ் மற்றும் உணவு வகைகளில் நிறமிகள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிறமிகள் கலந்திருப்பதாக எழுதி வைத்து நம்மை ஏமாற்றுகின்றனர்.

பேக்கேஜ் உணவுகளின் தன்மை மாறாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுகிறது. விவசாயத்தில் ரசாயனம் இல்லாத தானியங்களை உற்பத்தி செய்து வந்த நிலை மாறி இன்றைக்கு ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள் அதிகளவில் விளைவித்து விற்பனை செய்யப்படுகிறது. இப்போது தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை எறும்புகள் கூட உண்ணாமல் கடந்து சென்றுவிடுவதை பார்க்கலாம். அந்தளவிற்கு இனிப்புகளிலும் ரசாயனம் கலக்கப்படுகிறது. நுகர்வோர்களாகிய நாம் விலைவாசிக்கு மட்டும் குரல் கொடுக்காமல், தரமான உணவுகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். சாதாரண மக்கள் குடிக்கும் டீயில் கலப்படம் செய்யப்படுகிறது. நல்ல டீ தூள் நிறம் இருக்காது.

கலப்பட டீ தூள் சுவை, அடர்த்தி அதிகமாக இருக்கும்.  டீ கடைகளில் இருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட டீ தூள் மீண்டும் நிறம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு மாற்றாக இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்தும் பழக்கத்திற்கு மாற வேண்டும். நம்முடைய பயன்பாட்டிற்கான அனைத்து பொருட்களையும் தரமானதாக வாங்கி பயன்படுத்த வேண்டும். வணிக லாபத்திற்காக விற்பனை செய்யப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும். கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து வருங்கால தலைமுறையினரான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் நுகர்வோர் சங்கம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் மூலமாக உணவுப் பொருட்களின் நன்மை, தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, தேசிய நுகர்வோர் தின விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இதில், டிஆர்ஓ முஹம்மது அஸ்லம், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, உணவு பாதுகாப்பு அலுவலர் ரபீந்தரநாத் மற்றும் பள்ளி ஆசியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Consumer Association ,Collector ,Bhaskar Pandian , Ranipettai: Consumer associations should be formed in schools to create awareness among students about adulterated food items
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...