×

குழந்தை திருமணமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்-கலெக்டர் திவ்யதர்சினி வேண்டுகோள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் அனைவரும் சிறந்த கல்வியை கற்று உயர்ந்த நிலையை அடைவதற்கான உறுதியையும், குழந்தை திருமணமே இல்லாத மாவட்டமாக உருவாக்கவும் உலக மகளிர் தினத்தில் அனைவரும் உறுதியேற்போம் என்று கலெக்டர் பேசினார்.தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்து, குழந்தை திருமண தடுப்பு குறித்த குறும்படத்தை வெளியிட்டு பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையினை நாம் உருவாக்கும் போது தான், மகளிர் தின விழா கொண்டாடுவதற்கான முழு மகிழ்ச்சி கிடைக்கும். பெண் குழந்தைகள் உடலாலும், மனதாலும் பக்குவம் அடைவதற்கான வயது அவர்களுக்கு வர வேண்டும்.

இங்கு வருகை தந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் இளம் வயது திருமணம், குழந்தை திருமணம் இல்லாத நிலையினை உருவாக்கிட உறுதிகொள்ள வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் பெண் குழந்தைகளின் கல்விக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல உதவிட வேண்டும்.

தர்மபுரியில் 20 ஆண்டுகளில் பெண்கல்வி முன்னேற்றம் நல்ல முறையில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டத்தில் தான் முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டது. இதேபோல் பெண் கல்வியிலும், பெண்களின் வளர்ச்சியிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக உருவாக வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் உடனடியாக 1098 மற்றும் குழந்தை உதவி மையங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். மேலும், தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கு பாலக்கோடு புதூர் மாரியம்மன் திருநங்கைகள் சிறப்பு குழுவிற்கு ₹5 லட்சம் கடனுதவியையும், ஊட்டச்சத்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹7ஆயிரம் பரிசு தொகையையும் கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சப் கலெக்டர் சித்ரா விஜயன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, சிறப்பு விருந்தினர் அரங்கநாயகி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Divyadarshini , Dharmapuri: All women in Dharmapuri district are committed to achieving the highest level of education and child marriage
× RELATED இன்ஸ்டாகிராம் நட்பால் உருவான...