×

ஆர்சிபியின் புதிய கேப்டன் யார்?: மார்ச் 12-ல் அறிவிக்கப்படும்; அணி நிர்வாகம் தகவல்

பெங்களூரு: ஆர்சிபியின் புதிய கேப்டன்  யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. தொடர் தோல்விகளை தொடர்ந்து அந்த அணியில் கேப்டன் விராட் கோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். வரும் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் போட்டியில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் மோதுகிறது. ஐபிஎல் போட்டி துவங்க இன்னும் 17 நாட்களே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் நாளுக்கு ஒரு தங்களது கேப்டன்களை அறிவித்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் கூட தங்களது அணியின் கேப்டன்களை அறிவித்தது. ஆனால் ஆர்சிபி அணிமட்டும் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வரும் 12-ம் தேதி அன்று ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய  டூ பிளசிஸ், இம்முறை ஆர்சிபி அணிக்கு தேர்வாகி இருப்பதால் அவருடைய பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், விராட் கோலி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூரு அணியின் முன்னாள் வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், அந்த அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்றும், அதுகுறித்த தகவல்களும் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : RCB , RCB, Captain, Virat Kohli, March 12, Team Management
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...