×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி கிருத்திகை கோலாகலம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில், முருகன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இந்நிலையில், மாசி கிருத்திகையை முன்னிட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கார், பைக், வேன், பஸ்களில் வந்தனர். அதே போல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பயணம் செய்து, முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும், கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் நீராடி மொட்டை அடித்து, ஏராளமான பக்தர்கள் வேல் அலகு தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

தொடர்ந்து திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருச்சபை மற்றும் பக்த ஜன சபாக்களின் சார்பில் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்தார். இதில், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்போரூர் இன்ஸ்பெக்டர்  லில்லி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகை  பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில், கோயிலுக்கு வந்த பெண்களுக்கு,  நகைகளை பாதுகாத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு வளையம் வழங்கப்பட்டது.


Tags : Thiruporur Kandaswamy Temple , Mass celebration at Thiruporur Kandaswamy Temple
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயில்...