ரிப்பன் மாளிகையில் மகளிர் தின கொண்டாட்டம்; பெண்ணாக பிறந்ததற்கு பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்: சென்னை மேயர் பிரியா ராஜன் பெருமிதம்

சென்னை:  சென்னை மாநகராட்சியின் சார்பில் ‘நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆனையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பரத நாட்டிய கலைஞர்கள், பறையிசை கலைஞர்கள், சிலம்பம் மற்றும் சுருள்வாள் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பேசுகையில், ‘நான் பெண்ணாக பிறந்ததற்கு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். நாட்டுக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உள்ளாட்சி தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு கொடுத்து முதல்வர் காட்டியுள்ளார்.

ஆண்களை தாழ்த்தி பேசுவதோ, பெண்களை தூக்கி பேசுவதோ சமத்துவம் கிடையாது. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன்’ என்றார். தொடர்ந்து, துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், ‘எப்போதும் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் பெண்கள் தான். எங்களை இயக்குபவர்களே பெண்கள் தான். என் திருமணம் முடிந்தவுடன் முதல் பிள்ளை பெண் பிள்ளையாக  பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படியே எனக்கு பெண் பிள்ளை பிறந்தது’ என்றார்.  விழாவின் நிறைவாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், ‘உலக பெண்கள்  தினத்தில் பாலின சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகரத்தில் தலைவர் ஒரு பெண்ணாக உள்ளார். இதுதான் பெண்கள் மேம்பாடு’ என்றார்.

Related Stories: