×

வேலூர் அப்துல்லாபுரத்தில் நடந்துவரும் விமான நிலையப்பணிகள் 95% நிறைவு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்க முதற்கட்டமாக ₹32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், உணவகம், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ₹1.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்திற்கு கூடுதலாக மேலும் 10.72 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. இந்த நிலமானது 2 பேருக்கு சொந்தமானது. இதில் தேசிய ெநடுஞ்சாலையோரம் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு ஹெக்டேருக்கு அதிகளவில் இழப்பீடு தொகை கிடைக்கிறது. எனவே அடுத்துள்ள நபரும் நிலத்திற்கு இழப்பீடு அதிகமாக கேட்டுள்ளார். இதையடுத்து, நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தி கேட்டு, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வேலூர் விமான நிலையத்தில் ரன்வேயின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது, 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. தனிநபருக்கு சொந்தமான இடத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், விமான நிலைய பணிகள் முடிவடைவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் நிலத்தை கையகப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி உள்ளது. இதனால் தனிநபருக்கு சொந்தமான நிலத்தை விமான நிலையத்திற்கு ஓப்படைக்க முடியவில்லை. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி விமான நிலைய பணிகள் நிறைவடைந்து, 2020ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2021ம் ஆண்டு மார்ச், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விமானங்கள் பறக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் பணிகள் முடிந்து விமான நிலையம் அடுத்த ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. ரன்வே முடிவடையும் பகுதியில் உள்ள அரசு விடுதி, தனிநபர் இடத்தில் தான் ரன்வே என்டிங் சேப்ட்டி பாயிண்ட் வருகிறது. தற்போது, அந்த தனிநபர் இடம் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமான நிலைய பணிகள் முழுமையடையவில்லை. அந்த இடத்தை ஒப்படைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு விடுதி மற்றும் தனிநபர் இடத்தை ஒப்படைத்த பிறகு கட்டிடத்தை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து, விமானங்கள் இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்படும்’ என்றனர்.

விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர்கள் பலரும் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான தொழில் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் பலரும் மருத்துவம், கல்வி, பொற்கோயில் உள்ளிட்டவைக்காக வேலூருக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை வந்து, அங்கிருந்து காரில் வேலூருக்கு வரவேண்டிய நிலை உள்ளது. வேலூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் இருந்து வேலூருக்கும், வேலூரில் இருந்து பிற பகுதிகளுக்கு விமானத்தில் செல்ல முடியும் என்பதால் விமான நிலையத்தை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags : Velur Abdullah Puram , 95% completion of ongoing airport works at Abdullapuram, Vellore: Officials informed
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...