×

ஹோட்டல் சைலன்ட் சைன்ஸ்

நன்றி குங்குமம் தோழி

உணவகத்தின் உள்ளே நுழைவதில் துவங்கி உணவை ஆர்டர் கொடுத்து, சாப்பிட்டு முடித்து வெளியில் வரும் வரை நடப்பது அத்தனையும் பின் ட்ராப் சைலன்ஸ். ஆம், இங்கே பணியாற்றும் அனைவரும் ‘காது கேளாத வாய் பேச முடியாத’ (deaf and dumb) மாற்றுத்திறனாளிகள். நம்மிடத்தில் அவர்கள் பேசுவது முற்றிலும் சைகை மொழியிலே (sign language).

சைகை மொழி என்றதும் டெக்னிக்கலாக நினைக்க வேண்டாம். நம் எல்லாருக்குள்ளும் சைகை மொழி உண்டு என்பதால் சற்று நேரத்திலே அவர்கள் பேசுவது நமக்கு புரியத் தொடங்கும். நம்முடைய லிப் ரீடிங்கை வைத்து நாம் சொல்வதையும் அவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காக இயங்கும் வாய்ஸ் ஃபார் த வாய்ஸ்லெஸ் (voice for the voiceless) தொண்டு நிறுவனம், பிரபல அசைவ உணவகமான சேலம் ஆர்.ஆர் பிரியாணியின் உதவியோடு மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு எதிரே அமைந்துள்ளது சேலம் ஆர்.ஆர். பிரியாணியின் கிளை. இந்தக் கடை தற்போது காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சக மனிதர்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்து வரும் இந்த மாற்றுத் திறனாளி இளைஞர்கள் தனித்துவமான சேலம் ஆர்.ஆர். பிரியாணி அடையாளத்தோடு சைவ உணவையும் இணைத்து சமைக்கிறார்கள். சமையல்காரர், உணவு பரிமாறுபவர், சுத்தம் செய்பவர், கணக்காளர் என அனைவருமே மாற்றுத்திறனாளிகள்.

எல்லா உணவகங்களிலும் இருக்கும் உணவுதான் என்றாலும் இவர்களுடையது தரமான உணவு என்கின்றனர் உணவை ருசித்தவர்கள். சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனமே பிரியாணி தயாரிப்பு பயிற்சியை இவர்களுக்கு வழங்குவதோடு, சமையல் கலையின் நுணுக்கங்களை இவர்களுக்கு பயிற்றுவிக்க சில தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் தானாக முன் வந்துள்ளன. தங்களாலும் அனைவரையும்போல் அனைத்து வேலைகளையும் இயல்பாய் செய்ய முடியும் என்பதை நிறுபிக்கவே கடையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் இந்த மாற்றுத் திறனாளி சமையல் கலைஞர்கள்.  

கொரோனா நோய் தொற்று நேரம் என்பதால் இப்போதைக்கு காலை மாலை டிபன் அயிட்டங்கள் மட்டுமே தயாரித்து பார்சலாக வழங்கி வருகிறார்கள். மால், சினிமா தியேட்டர்கள் திறந்து மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு வந்தபின் மதிய உணவையும் தயாரித்து வழங்கும் முடிவில் இருக்கிறார்கள். கூடவே பார்ட்டி ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய உள்ளனர். வியாபாரம் சூடு பிடித்ததும் ஸ்வ்கி, ஜொமாட்டோவோடு கை கோர்த்து டெலிவரி செய்யும் எண்ணமும் இருக்கிறது.

சேலம் ஆர்.ஆர்.பிரியாணி பிராண்டுடன் கூடவே சைகை மொழியின் பொருளை உணர்த்த “சைலன்ட் சைன்ஸ்” என்ற பெயர் மாற்றமும்  இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் சைகை மொழி உண்டு. இங்கு வேலை செய்பவர்கள் தங்கள் மொழி வழியே உங்களின் ஆர்டர்களை எடுக்கிறார்கள். மக்கள் சைகை மொழியினை உணர வேண்டும் என்பதற்காகவே மெனு கார்டிலும் சைன் மொழியை இடம் பெறச் செய்யும் எண்ணமும் உள்ளது. இங்கு வருபவர்கள் உணவை ருசிப்பது மட்டுமின்றி வித்தியாசமான அனுபவத்தையும் பெறுவார்கள் என்கின்றனர் உணவை ருசித்தவர்கள்.

இவர்களில் சிலர் சமையல் கலையோடு விளையாட்டு வீரர்களாகவும் இருக்கின்றனர். எங்கள் கை பக்குவத்தை உணர குடும்பத்தினரோடு வந்து ஆதரவு தர வேண்டும் எனக் கூறியதோடு வாழ்வின் எந்தத் தடையையும் தகர்த்து, விடா முயற்சியோடு போராடுவோம் என விரல் அசைத்து பார்வையாலே விடை கொடுத்தனர்.

ரத்னம்

செஃப் மற்றும் விளையாட்டு வீராங்கனை சமைப்பது எங்களுக்கு ரொம்பவே பிடித்தமான விசயம். நாங்கள் ஒன்றாய் இணைந்து ஹேட்டல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நீண்ட நாள் கனவு. அந்த கனவு மெய்ப்பட்டுள்ளது. கூடவே நான் விளையாட்டு வீராங்கனையும். பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் நீண்ட நாள் ஆசை. சாட்புட், ஜாவ்லின் த்ரோ, டிஸ்க் த்ரோவில் நேஷனல் சாம்பியன் நான். இதுவரை 11 ஸ்டேட் மற்றும் ஐந்து நேஷனல் போட்டி
களில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளேன்.

தமிழ்ச்செல்வன், உரிமையாளர் சேலம் ஆர்.ஆர். பிரியாணி

பிறந்ததில் இருந்தே ஹோட்டல் தொழிலில் இருக்கிறேன். எனக்கு தமிழகம் முழுவதும் 27 கிளைகள் உள்ளது. இவர்களால் உணவகத்தை எடுத்து நடத்த முடியுமா என்ற சந்தேகம் முதலில் இருந்தது. இவர்களின் சமையலை ருசித்த பிறகு ரொம்பவே வியந்து போனேன். அப்படி ஒரு சுவை. உடல் ரீதியாய் குறை இருந்தாலும் கை பக்குவத்தில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சாலையோரத்தில் தள்ளுவண்டி போட்டு உணவுகளை விற்பனை செய்த அனுபவம் எனக்கும் உண்டு. அதன் கஷ்ட நஷ்டங்களை நான் உணர்ந்தவன். ஏற்கனவே இவர்கள் மாற்றுத் திறனாளிகள். இதில் பெண்களும் இருக்கிறார்கள். தள்ளுவண்டியில் விற்பனை செய்வது பார்க்க அவ்வளவு
கண்ணியமாக இருக்காது. எனவே பீனிக்ஸ் மாலுக்கு எதிர்புறத்தில் உள்ள எனது சேலம் ஆர்.ஆர். பிரியாணிக் கடையின் கிளையை இவர்களே எடுத்து நடத்த கொடுத்துவிட்டேன். இவர்களின் கைபக்குவத்தில் இப்போது சைவ உணவுகளும் இங்கு கிடைக்கிறது.

ரொம்பவே தரமாகவும் ருசியாகவும் தருகிறார்கள். வெற்றிகரமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. கண்டிப்பாக இதை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதரவு தர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் இதுபோல் உதவக் காத்திருக்கிறேன். திறமை இருப்பவர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கற்பகம், வழக்கறிஞர் வாய்ஸ் ஃபார் த வாய்ஸ்லெஸ்

நான் வழக்கறிஞர். கூடவே வாய்ஸ் ஃபார் த வாய்ஸ்லெஸ் இண்டியன் பியூப்பிள் ஃபவுண்டேஷனுடைய ஹான்ரரி சி.இ.ஒ. எங்கள் அலுவலகம் டிசபிள் பிரெண்ட்லி. இவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க இங்கே வழக்கறிஞர்கள் இல்லை. நாங்கள் இவர்களின் பிரச்சனை சார்ந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்கிறோம். இவர்களுக்கான வழக்குகளை இலவசமாகவே எடுத்து நடத்துகிறோம். சமூகம் சார்ந்தும் தேவையான உதவிகளை அமைப்பின் மூலம் அவர்களுக்கு செய்து வருகிறோம்.

ஒரு பிரென்ட்லி மீட்டிற்கு சென்ற இடத்தில் மாற்றுத் திறனாளி நண்பர்கள் சமைத்திருந்த உணவு எங்களை ரொம்பவே ஈர்த்தது. உணவில் அத்தனை ருசி. அவ்வளவு தரம். விசாரித்ததில் அனைவருமே காது கேளாத வாய்பேச முடியாதவர்கள் எனத் தெரிய வந்தது. ஒரு உணவைக் காட்டி இது மாதிரி வேண்டுமென்றால் அப்படியே செய்து கொடுக்கும் திறமை இருந்தது. இயல்பிலே அவர்கள் சைவ அசைவ உணவுகளை மிக அருமையாகச் சமைக்கிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என முடிவு செய்தோம். எனது சீனியர் வழக்கறிஞர் பிரபாகரன் சார். சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர். அவரும் இந்த அமைப்பின் லீகல் அட்வைசர் மற்றும் கோ ஃபவுண்டர். அவருடைய க்ளையன்ட் சேலம் ஆர்.ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச் செல்வன் சார். உணவைத் தயாரித்து தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யத்தான் அவரிடத்தில் ஆலோசனை கேட்டோம். அவரோ இவர்களின் ருசியில் ஈர்க்கப்பட்டு, தனது உணவகத்தின் லாபகரமான கிளை ஒன்றையே அவர்களுக்கு கொடுத்து மிகப் பெரும் நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.

மாற்றுத் திறனாளி இளைஞர்கள் ஒன்றாக இணைந்து உணவகம் நடத்துவது தமிழ் நாட்டில் புது முயற்சி. நாங்கள் பின்னால் இருந்து அவர்களுக்கு ஆதரவு தருகிறோம் அவ்வளவே. பொதுமக்கள் இவர்கள் உணவகத்திற்கு ஆதரவு கொடுத்து, இவர்களையும் இவர்களின் சைகை மொழியையும் உணர வேண்டும் என முடித்தார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!