×

சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள்: துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு

சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட அப்பாவு நகரில் அமைந்துள்ள மாம்பலம் கால்வாய் பகுதிகளில் துணை மேயர் மகேஷ் குமார் நேற்று கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், வார்டு-169, அப்பாவு நகரில் அமைந்துள்ள மாம்பலம் கால்வாய் பகுதிகளில் மலேரியா பணியாளர்களின் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை துணை மேயர் மு.மகேஷ் குமார் நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அவ்வப்பொழுது அகற்றவும், கொசுப்புழுக்கள் உருவாவதை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் விதத்தில் நீர்நிலைகளில் தேவையான அளவிற்கு கொசுக் கொல்லி மருந்துகளை தெளிக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், தற்சமயம் சென்னையில் நீர்வழிக்கால்வாய்களில் டிரோன் இயந்திரங்களைக் கொண்டும் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.  அப்பாவு நகரில் இந்த மாம்பலம் கால்வாயிலும் டிரோன் இயந்திரங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் துணை மேயர்  மு.மகேஷ் குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை உடனடியாக தங்கள் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதை களைவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.  

அதனடிப்படையில், வார்டு-169க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்து, இந்தப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரைகளை முனைப்புடன் நிறைவேற்றுவதில் அதிகக் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், மண்டல அலுவலர் திருமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Deputy Mayor ,Maheshkumar , Mosquito eradication works in Chennai: Deputy Mayor Maheshkumar study
× RELATED மழைநீர் வெளியேறாததால் சாலை மறியலில்...