ஊராட்சி பள்ளிகளில் அகர நூலகம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

தஞ்சை: ஊராட்சி பள்ளிகளில் அகர நூலகம் உருவாக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தி உள்ளார். தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குருங்குளம் மேற்கு ஊராட்சி தோழகிரிப்பட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அகர நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக தஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பகுதியில் அகர நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களை அணுகி இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அந்தந்த பகுதிக்கும் கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா காலத்தில் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இறுதிக்குள் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் தொடக்கத்திலிருந்து திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. அதன்பிறகு மே மாதம் ஏற்கனவே வெளியிட்டுள்ள அட்டவணைப்படி பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: