×

உ.பி-யில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறு; 5 மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மாலை வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான இறுதிகட்ட மற்றும் 7ம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது ெதாடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி  நடைபெற்று வருகிறது.

அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி,  வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54  தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மொத்தம்  613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜக முதல்வர் ேயாகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 அமைச்சர்களின் எதிர்காலம் இன்றைய வாக்குப்பதிவின் மூலம் உறுதிசெய்யப்படும். 2.06 கோடி வாக்காளர்கள்  வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 10ம் தேதி எண்ணப்படுகின்றன. உத்தர பிரதேசம் மட்டுமின்றி உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் 10ம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன. அதனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சி மேற்கண்ட 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Tags : U. Today , Final turnout in UP today; 5 Who will rule the state? Post-election evening release
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...