×

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு திமிறி எழுந்த காளைகள்: திமில் பிடித்த காளையர்

கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர்.திண்டுக்கல் அருகே, நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு துவக்கமாக முதலில் கிராம மக்கள் சார்பில் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடபட்டன.

இதில் திண்டுக்கல், அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். இதில் ரஞ்சன் (23), திருச்சி அரவிந்தன் (24), அய்யம்பாளையம் விஜய் (24), திருச்சி தமிழரசன் (28) உட்பட 45 பேர் காயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, பணமுடிப்பு, சைக்கிள், எவர்சில்வர் அண்டா, கட்டில், பீரோ, செல்போன், டிவி ஆகிய பரிசுகள் வழங்கபட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.



Tags : Jallikattu Thimiri ,Dindigul ,Thimil , Bulls raised by Jallikattu Thimiri near Dindigul: Thimil's favorite bull
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...