×

காவிரி திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்

சாயல்குடி: கடலாடியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்து பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாகி வருகிறது. குளம் போல் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.காவிரி, ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கும், சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கடுகுசந்தை, கீழச்செல்வனூர், சிக்கல் பகுதிக்கும் ராட்சத சிமென்ட் பூசப்பட்ட இரும்பு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது.ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சாலையோரம் தோண்டப்படும் குழிகள், தண்ணீர் திருட்டுக்காக சேதப்படுத்துதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே கசிந்து வீணாகி வருகிறது.

மேலும் குழாய் ஏர்வால்வு தொட்டிகள் அனைத்தும் மூடாமல் திறந்து கிடக்கிறது. இதில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தாலும் கூட, சிலர் தொட்டிக்குள் சோப்பு போட்டு குளித்தல், துணிகளை துவைத்தல், டிராக்டர் டேங்கர்களில் தண்ணீர் எடுத்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பான்மையான தொட்டிகள் சேதமடைந்து கிடக்கிறது.இந்நிலையில் கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகில் குழாய் சேதமடைந்து கடந்த 3 நாட்களுக்கு மேலாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.மேலும் தண்ணீர் வீணாகி வருவதால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேராததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சேதமடைந்துள்ள குழாய், ஏர்வால்வு தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Millions of liters of drinking water wasted due to Cauvery project pipeline rupture
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்