×

காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே சுமுகமான உறவு வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

முன்னாள் போலீஸ் கமிஷனர் டாக்டர் மீரான் சதா போர்வான்கர்

உலகளவில் காவல்துறை மீதான நற்பெயர்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு அவப்பெயர்கள் ஏற்படும் வண்ணம் அடிக்கடி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கான சான்றுகள் எண்ணிலடங்கா…! அவ்வாறு இருக்கையில் காவல் துறைக்கும் மக்களுக்குமிடையே ஒரு பிணைப்பு ஏற்படும் போது எல்லாமே சுமுகமாக இருக்கும்.

அந்த சுமுகத்திற்கான இடையூறாக இருப்பது எது? அதைக் கலைந்து காவல்துறையை எவ்வாறு மேம்படுத்துவது?... போன்ற கேள்விகளுக்கு விடையளித்
திருக்கிறார் புனேவின் முன்னாள் போலீஸ் கமிஷனர் டாக்டர் மீரான் சதா போர்வான்கர் (Dr.Meeran Chadha Borwankar). பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவர், வெறும் ஐபிஎஸ் அதிகாரியாக மட்டுமின்றி எழுத்தாளர், மோட்டிவேஷன் ஸ்பீக்கர், வழக்கறிஞர் என்று தனது பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறார்.

“நம் நாட்டில் எல்லாத்துறைகளிலும் முதல் பிரச்னையாக இருப்பது ஊழல். இது அனைவரையும் பாதித்தாலும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதாக ஒழுங்கற்ற, பகுத்தறிவற்ற வேலை நேரம். இது நல்ல நோக்கமுள்ள போலீஸ் அதிகாரிகளை கூட ‘உணர்வற்ற மற்றும் இயந்திர’ தன்மையுள்ள மனிதர்களாக மாற்றிவிடுகிறது. மூன்றாவதாக, குற்றம் அல்லது கூட்டக் கட்டுப்பாட்டைத் தடுப்பதற்கும், அதனைக் கண்டறிவதற்கும் தொழில்நுட்ப பற்றாக்குறை. இம்மூன்றையும் அப்பட்டமான சட்டவிரோத அரசியல் தலையீடும், நெறிமுறையற்ற சில செயல்களும் இணைத்துக் கொண்டே இருக்கிறது” என்று கூறும் மீரான், இதற்கான தீர்வினை அடுக்கினார்.

“காவல் துறையில் நேர்மையான, வெளிப்படையான ஆட்களை எடுப்பதோடு அவர்களுக்கு வழக்கமான பயிற்சிகள் அளிக்க வேண்டும். இது அரசாங்க எந்திரத்தின் ஊழல் எதிர்ப்பினை பலப்படுத்த உதவும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு ஊழல் தடுப்பு பணியகங்கள் (ACBs)
அரசியல் போட்டியாளர்களை அச்சுறுத்தும் கருவிகளாக மட்டுமே உள்ளது.

அதிகாரிகளின் பணிச்சுமையைக் குறைக்க மூன்று ஷிப்ட்டுகளாக பிரிப்பதோடு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றம் - விசாரணையினை ஒன்றாக இணைக்காமல், தனித்தனியாகச் செயலாற்ற வேண்டும். மேம்பட்ட தடயவியல் ஆய்வகங்கள், உபகரணங்கள், தொழில்நுட்பங்கள்… காவல் அதிகாரிகளை திறமையாக்குவதோடு, பாதிக்கப்படும் குடிமக்களுக்கு உடனடி தீர்வு காண முயல்கிறது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டபடி மாநில பாதுகாப்பு ஆணையங்கள், காவலர்கள் புகார் அளிக்கும் அதிகாரிகளை உருவாக்குவதன் மூலம்  தேவையற்ற அரசியல் தலையீட்டைக் குறைப்பதோடு காவல்துறையினையும் மேம்படுத்தும்” என்று கூறும் மீரான், இதற்கு அரசாங்கமும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.

“எங்களுக்கு புதிய கமிஷன்களோ அல்லது புதிய செயல் திட்டங்களோ ஏதும் தேவையில்லை. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த ஏழு சீர்திருத்தங்களை அமல்படுத்தினாலே மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். இந்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்த சமூகத்தின் தூண்கள் எதுவும் அழுத்தம் தரவில்லை என்பது வருத்தமளிக்கிறது. காவல் துறை சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில், கட்சி வித்தியாசம் பாராமல் அரசியல்வாதிகள் அனைவருமே தயங்குகிறார்கள். ஏனெனில், இது சட்ட அமலாக்கத்தின் மீதான அவர்களின் தன்னிச்சையான அதிகாரங்களைக் குறைக்கும்.

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அடிப்படை சூழலை மாற்ற வேண்டும். துன்பத்தில் இருக்கும் ஒரு குடிமகன் வருவது இங்கே தான். அவர்களின் புகார்களில் பெரும்பாலானவை அறியப்படாதவை மற்றும் இயற்கையில் சிறியவை. பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்களையும், ஆலோசகர்களையும் நாங்கள் காவல் நிலையங்களில் நியமித்தால், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களோடு கலந்தாலோசித்து அவர்களுக்கான முழு நீதியைப் பெற்றுத் தரலாம்.

இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக நேரம் கிடைப்பதால் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த முடியும். காவல் நிலையங்களில் அதிகமான பெண் காவலர்களை நியமிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு உண்டாகுவதோடு, புகார் அளிக்கவும் முன் வருவார்கள்.

காவல்துறை குறித்த கொள்கையைத் தீர்மானிக்க மாநில பாதுகாப்பு ஆணையங்களை உருவாக்குவது அவசியம். உச்ச நீதிமன்றம் முன் மொழிதல் படி, இந்த ஆணையத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி நபர்கள், வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் நம்பகமான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதேபோல் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி காவலர் சீர்திருத்தங்கள் உடனடியாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டுமென்று நாம் அனைவரும் வலியுறுத்துவதே தீர்வு” என்கிறார்.

“காவல்துறையைக் கண்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை” என்று கூறும் மீரான், ‘‘காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு வேண்டும். மக்கள் காவல்துறையைக் கண்டு அஞ்சுவதற்கான காரணி காவலர்கள் மீதுள்ள தவறான பிம்பம். இதில் துன்பகரமான முரண்பாடு என்னவென்றால் குற்றவாளிகள் காவல்துறைக்கு பயப்படாமல் சட்டத்தை மதிக்கும் குடிமகன்கள் பயப்படுவதுதான். காவல்துறையினருடன் பலர் அச்சமின்றி தொடர்பு கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Mohalla Committees, Mahila Dakshta Samitis, மாணவர்களின் வேலைவாய்ப்பு திட்டங்கள்… போன்ற அமைப்புகள் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும். அதேபோல் ஒரு குடிமகனை ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருதுவதோடு, பெண்களின் உரிமைகளை மதிக்கும் காவலர்களாக இருக்க அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அவசியம். சத்தமிட்டு ஆக்ரோஷமான துப்பாக்கியை துளைப்பவராக இல்லாமல், திறமையான சேவை வழங்கும் ஒரு நபராக காவல்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும்”  என்றார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தொகுப்பு: அன்னம் அரசு

Tags : guards ,
× RELATED தஞ்சையில் காவலர்களை தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்