×

பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு!!

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி நகரங்களில் சிக்கி தவிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.  உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ளது. முதலில் உக்ரைன் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு ராணுவ மையங்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நகரங்கள், அணு மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போர் விமானங்கள், தரை வழியாக தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் முக்கிய வர்த்தக நகரும், துறைமுக மற்றும் கப்பல் கட்டும் நகரமான கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள், நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் தலைநகரமான கீவ் நகரை கைப்பற்ற கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இதற்காக பல கிமீ தூரத்திற்கு டாங்கிகள், ராணுவ தளவாடங்களுடன் படையை அணிவகுத்து நிறுத்தி உள்ளது.

இந்நிலையில், மரியுபோல், சுமி, கார்கிவ், கீவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் குண்டுமழையும் பொழிகிறது. எனவே அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இது குறித்து, ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் , குழந்தைகள்,  பெண்கள் மற்றும் முதியவர்கள் சண்டையில் இருந்து தப்பிக்க அனுமதிக்கும்  வகையில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று உக்ரைன் தென் கிழக்கில் உள்ள மரியுபோல்,  சுமி, கார்கிவ், கீவ்  நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறபோர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து முதல் மனிதாபிமான அடிப்படையில் இந்த நகரங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தம் எவ்வளவு நேரம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பாக செல்ல தனி பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் இருநாட்டு ராணுவமும் எந்த தாக்குதலும் நடத்த மாட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளன.


Tags : Ukraine ,President of France , France, President, Request, Ukraine
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...