×

நாகை பட்டினச்சேரியில் கடல் சீற்றத்தால் கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் சேதம்: தென்னை மரங்கள் இழுத்துச்செல்லப்பட்டன

நாகை: நாகை பட்டினச்சேரியில் நேற்று கடல் சீற்றத்தால் கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் 40 வீடுகள் சேதமடைந்தது. 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டன. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் புதிய காற்றழுத்தம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இதன்காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகத்தில் நேற்றும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில்  நாகையில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. நாகூர் அருகே கடற்கரையோரம் உள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

இங்கு நேற்று காலை கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழும்பின. இதில் கடல் நீர் 500 மீட்டர் தூரத்துக்கு கிராமத்துக்குள் புகுந்தது. கரையோரம் இருந்த 40 வீடுகள் சேதமடைந்ததுடன், அலையில் இழுத்து  செல்லப்பட்டன. மேலும் கடற்கரையோரம் இருந்த 150 தென்னை மரங்களும் வேரோடு அலையில் இழுத்து செல்லப்பட்டது. பட்டினச்சேரி கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தகவலறிந்த தாசில்தார் ஜெயபாலன் மற்றும் அதிகாரிகள் பட்டினச்சேரிக்கு வந்து பார்வையிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் கடற்கரையோர கிராமம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும். எனவே கரையோரத்தில்  தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால்  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5,000 மீனவர்கள் நேற்று 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதேபோல் மயிலாடுதுறை  மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்லும், கொடியாபாளையம்,  கொட்டாய்மேடு, ஓல கொட்டாய்மேடு, மடவாமேடு, புதூர்பட்டினம், தர்காஷ்  பகுதியை சேர்ந்த 5,000 மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

Tags : Nagai Pattinacherry , Sea rage damages houses in Nagai Pattinacherry: Coconut trees uprooted
× RELATED கருத்து வேறுபாடு: நாகை...