×

காக்கி உதவும் கரங்கள் வாட்ஸ்அப் குழு மூலம் காவலர் மகன் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரூ.12.86 லட்சம் நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை: காக்கி உதவும் கரங்கள் வாட்ஸ்அப் குழு மூலம், காவலர் மகனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.12.86 லட்சம் நிதி உதவியை போலீஸ் கமிஷனர் வழங்கினார். பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக தேவேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகள் மனீஷா (12) கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 20.3.2021 அன்று, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக காவல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.7.5 லட்சமும், கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை விற்று ரூ.12.5 லட்சமும் என மொத்தம் ரூ.20 லட்சம் செலவு செய்து மகள் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில், காவலர் தேவேந்திரனின் 2வது மகன் கிஷோரும் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கிஷோருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் 9ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. முதல் மகளுக்கு தனது வீட்டை விட்டு அறுவை சிகிச்சை செய்த தேவேந்திரனுக்கு, இந்த முறை அறுவை சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் தவித்து வந்தார். அவருக்கு உதவும் வகையில், அவருடன் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 2011ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் ‘காக்கி உதவும் கரங்கள்’ என் வாட்ஸ்அப் குழுவின் மூலம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 700 ரூபாய் வசூலித்தனர். இந்த பணத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவலர் தேவேந்திரன் குடும்பத்தினரை நேரில் அழைத்து வழங்கினார். மேலும், காவலர் நல நிதியிலிருந்து ரூ.61,285 என மொத்தம் ரூ.12,86,985 வழங்கினார். சிறுவன் கிஷோர் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

Tags : Khaki ,WhatsApp ,Commissioner , Khaki Helping Hands WhatsApp Team Funds Rs 12.86 Lakh For Kidney Surgery: Police Commissioner
× RELATED கோடை வெயில் தாக்கத்திலிருந்து...