×

திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளை; வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 31 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்: மகாராஷ்டிராவில் சிக்கினர்

திருப்பூர்: திருப்பூரில் உள்ள அடகு கடையில் 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி நகைகள் (மொத்தம் 31 கிலோ), ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற பீகாரை சேர்ந்த 4 பேர் ரயிலில் தப்பிச்சென்ற போது மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி 3வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு முன்புறம் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு நகை அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது 3 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதியின் அருகில் திருப்பூர் ரயில் நிலையம் இருந்ததால், கொள்ளையர்கள் ரயிலில் தப்பி சென்றிருக்கலாம்? என போலீசார் சந்தேகித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தபோது, அதே 4 பேர் அவ்வழியாக சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதில், ஒரு தனிப்படையினர் சென்னைக்கும், சந்தேகிக்கப்படும் நபர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மற்றொரு தனிப்படை மகாராஷ்டிரா மாநிலம் மும்பபைக்கும் விரைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு கொள்ளை கும்பல் சென்னையில் இருந்து திரிபுராவிற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில், மகாராஷ்டிரா மாநிலம் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய 4 பேர் வந்துள்ளனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாதப் ஆலம் (37), பத்ரூல் (20), முகமது சுபான் (30), திலாகஸ் (20) என்பதும், திருப்பூர் அடகு கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 3 கிலோ 306 கிராம் தங்கம்,  28 கிலோ வெள்ளி, ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 4 பேரையும் திருப்பூர் போலீசாரிடம், மும்பை போலீசார் ஒப்படைக்க உள்ளனர். மேலும், இவர்கள் வெளிமாவட்டங்களில் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Tirupur ,Uttar Pradesh ,Maharashtra , Tirupur jewelery pawn shop robbery; 4 teenagers arrested in Uttar Pradesh: 31 kg gold, silver seized: Maharashtra
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்