கம்பம் பஸ்நிலையத்தில் அரசு பஸ் முன்பதிவு மையத்துக்கு பூட்டு: பயணிகள் தவிப்பு

கம்பம்: கம்பம் பஸ்நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் பூட்டிக்கிடப்பதால், முன் பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். கம்பத்திலிருந்து சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தமிழக அரசு சார்பில், விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக நகரில் பஸ்நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் உள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் அரசு பஸ்களுக்கு இந்த மையத்தில் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சமீப காலமாக முறையாக முன்பதிவு மையத்தை திறப்பதில்லை என கூறப்படுகிறது. முன்பதிவு மையத்தில் உள்ள செல் நம்பரை தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’பில் உள்ளது. இதனால், தொலைதூரம் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆன்லைன் மையங்களில் புக்கிங் செய்ய முயன்றாலும், சர்வர் ஓப்பன் ஆவதில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆன்லைனிலும் முன்பதிவு செய்ய முடிவதில்லை. இதற்காக தனி செயலி இருந்தாலும், ஆன்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் முன்பதிவு மையத்திற்கு வருகின்றனர்.

ஆனால், முன்பதிவு மையத்தில் பூட்டிக் கிடக்கிறது. இதனால், தனியார் ஆம்னி பஸ்களுக்கு பயணிகள் செல்கின்றனர். இது குறித்து என்.டி.பட்டி சுரேஷ் கூறுகையில், ‘பஸ்நிலையத்தில் உள்ள அரசு முன்பதிவு மையம் பூட்டிக் கிடக்கிறது. செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டால் ‘சுவிட்ச் ஆப்’ என வருகிறது. இதனால், தனியார் ஆம்னி பஸ்களில் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்கிறோம். இதனால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டபோது, ‘விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தனியாக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை ஆன்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அதன் உள்ளே சென்று முன்பதிவு செய்து பயணிகள் எளிதில் பயணிக்கலாம். மேலும், தனியார் புக்கிங் சென்டரில் புக் செய்து பயணிக்கலாம். இது போன்ற முன்பதிவு மையங்களுக்கு பொதுமக்கள் நேரில் வந்து புக்கிங் செய்வது குறைந்ததால், முன்பதிவு மையங்கள் திறப்பதில் ஏஜென்டுகள் ஆர்வம் காட்டுவதில்லை. இருந்த போதிலும் வேலை நேரம் மற்றும் செல் நம்பர் உபயோகத்தில் இருக்கும்படி ஏஜெண்டுக்கு அறிவுறுத்துகிறோம்’ என்றார்.

Related Stories: