×

அணையா அடுப்பு

நன்றி குங்குமம் தோழி

‘சாப்ட்டியா’ என்கிற ஒற்றை வார்த்தையில் கொட்டிக்கிடக்கிறது பேச மறுக்கும் மொத்த அன்பும். சரியான நேரத்தில் சரியான மனிதர்களால் கிடைக்கும் அரவணைப்பும் ஆறுதலுமே வாழ்க்கையில் கிடைக்கின்ற பொக்‌கிஷங்கள்.கோவையில் இயங்கி வரும் ‘ஜீவசாந்தி அமைப்பின்’ நிர்வாக இயக்குநர் சலீம். யாருமற்ற நிலையில் அனாதையாக இறந்தவர் உடல்களை நல்லடக்கம் செய்வதே இந்த அமைப்பின் முக்கிய பணி. கூடவே ‘அணையா அடுப்பு’ எனும் திட்டம் மூலம் தினம் குறைந்தது 500 பேருக்கு உணவு சமைத்து அன்ன தானம் செய்து வருகின்றனர். சமையலில் ஆரம்பித்து உணவை பார்சல் செய்து யாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது வரை அத்தனையும் பெண்களே. கூடவே அமைப்பில் இருக்கும் ஆண் தோழமைகளும் உதவுகிறார்கள்.

‘மனிதனுக்கு வரும் துன்பத்தில் பெரும் துன்பம் பசி.  ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் மண்ணில் மனிதனின் பசி போக்க அவரால் ஆரம்பிக்கப்பட்ட அணையா அடுப்பு திட்டத்தை தங்கள் திட்டத்திற்கான மாதிரியாய் கொண்டு கோயம்புத்தூரில் ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றனர் இவர்கள். ‘ஹங்கர் ஃப்ரீ வேல்ட்’ என்பதே இவர்களின் நோக்கம்.

‘யார் என்றே அறியாத ஒருவர் அழும்போது காரணமே தெரியாமல் நம் கண்களும் கசியுமாயின் அது தான் சிறந்த மனிதநேயம் என்கிற சலீம், “ ‘பிரார்த்தனை என்பது கையேந்தி இறைவனை வழிபடுவதல்ல, அடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து வருந்துவதே’ என்கிறார். உணவில்லாமல் தவிப்பவனுக்கு நீ தரும் ஒரு வேளை உணவில் அவன் உன்னை கடவுளாகப் பார்க்கிறான்.

உயிர்களை நேசிக்கும் மிகச் சிறந்த செயலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வேண்டுமென ஒருவன் நபிகளிடத்தில் கேட்க, ‘பசித்தவருக்கு உணவளி’ என்றார். இனியும் நேசிக்கிற மாதிரி ஒரு செயலை செய்ய என்ன செய்ய வேண்டும் என மீண்டும் இரண்டாவது முறை கேட்க, அப்போதும் நபிகள் ‘பசித்தவருக்கு உணவளி’ என்றார்.

மூன்றாவது முறையாக சிறந்த சமூக சேவைக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க, மூன்றாவது முறையும் ‘பசித்தவருக்கு உணவளி’ என்றார். மூன்று முறையும் நபிகள் நாயகம் சொன்னது ‘பசித்தவருக்கு உணவளி’ என்பதே. ‘பட்டினியில் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தால் ஐந்து தலைமுறைக்குப் புண்ணியம்’ என்கிறது இந்து மதம். ‘நீ எதை சாப்பிடுகிறாயோ அதையே உன் சகோதரனுக்கும் சாப்பிடக் கொடு’ என்கிறது கிறிந்தவ மதம். எல்லா மதங்களும் இங்கே வழியுறுத்துவது ஒன்றுதான்.

‘பசித்தவருக்கு உணவளி’ என்பதே அது.நமது முன்னோர்கள் சமூகத்திற்கு என்ன செய்தார்களோ அதையே பின்பற்றி வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், உணவுக்காக கையேந்துபவர்களுக்காக வருடத்தின் 365 நாட்களுமே எங்களால் தொடங்கப்பட்ட இந்த அடுப்பு அணையாமல் எரிய வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.  இதற்காக ‘ஈச் ஒன் ஃபீட் ஒன்’ திட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். அதாவது நம் குடும்பத்திற்குத் தேவையான உணவை சமைக்க அரிசி பாத்திரத்தில் கை விடும்போதே ஒரு பிடி அரிசி, ஒரு பிடி பருப்பை உணவு இல்லாதவர்களுக்காக எடுத்து தனியாக  ஒரு பையில் பெண்கள் வைக்கிறார்கள். ஒரு கைபிடி என்பது மாதத்தில் மூன்று முதல் ஐந்து கிலோ வரை ஒரு குடும்பத்தில் சேர்ந்து விடுகிறது.

பெண்களின் கரங்கள் பலவும் இதில் இணையும்போது கூட்டாஞ்சோறு மாதிரியாக இந்த அன்னதானத் திட்டம் மாறுகிறது. சுருங்கச் சொன்னால் கம்யூனிட்டி கிச்சன்.அணையா அடுப்பில் 90 சதவிகிதமும் பெண்கள் பங்களிப்பே. தினமும் ஏழு எட்டு பெண்களாவது பங்கேற்று குறைந்தது 500 பேருக்கு சமைக்கிறார்கள். சமைப்பதற்காக வரும் பெண்கள் பெரும்பாலும் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை மற்றும் மென்பொருள் துறை சார்ந்தவர்கள். குடும்ப பெண்களும் இதில் இருக்கிறார்கள். ஒரு முறை வந்தவர்கள் தங்கள் உறவுப் பெண்களையும், தோழிகளையும் கூடவே வேலை செய்பவர்களையும் உடன் அழைத்து வருகிறார்கள். இது ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் என்றே சொல்லலாம்.

பசியால் வாடுபவர்களுக்காக நான் சமைத்து கொடுக்கிறேன். பலரும் இதில் பசியாறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதை நிறைவாக்குகிறது.
பெண்கள் ஒரு செயலை முன்னெடுக்கும்போது உணர்வுப் பூர்வமாக ஈடுபடுகிறார்கள். அதில் வீரியமும் உள்ளது. இன்னும் கூடுதலாய் பயனாளர்களை களத்தில் நேரடியாகப் பார்க்கும்போது கூடுதல் உத்வேகத்தோடு மீண்டும் இந்த கம்யூனிட்டி கிச்சன் நோக்கி ஆர்வத்தோடு சமூகப் பணி செய்ய மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.

கோவை மாதிரியான தொழில் நகரங்களில், தொழில் ரீதியாய் நஷ்டம் அடைந்தவர்கள், சமூக புறக்கணிப்புக்கு உள்ளானவர்கள், சில புறக் காரணங்களால் சாலைகளுக்கு வந்தவர்கள், நடைபாதை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில் வாசல், மருத்துவமனை வளாகங்கள் எனத் தங்குகிறார்கள். நமக்கு யாராவது உணவு தர மாட்டார்களா எனும் ஏக்கத்தோடு இருப்பவர்களிடத்தில், ஒரு தாயாய், தந்தையாய், சகோதர சகோதரியாய், அவர்களின் பிள்ளையாய்  சமைத்த உணவினை கைகளில் கொடுக்கும்போது அவர்களின் வயிறு மட்டுமல்ல உள்ளமும் குளிர்கிறது. எனக்காக ஒருவர் தினமும் உணவோடு வருகிறார் என வாழ்க்கை மீது நம்பிக்கைகொள்ளச் செய்கிறது.

இந்த கம்யூனிட்டி கிச்சனை பெண்களாக எடுத்து செய்வதால் அன்பு, பாசம், அக்கறை என எல்லாமும் சேர்கிறது. வெற்றி கொள்ள அன்பை விட சிறந்த ஆயுதம் வேறென்ன இருக்க போகிறது பயனாளர்களும் இவர்களோடு நெருக்கமாகி மகளாக, பேத்தியாக அம்மாவாக பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். மன நோயாளிகளும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இவர்களை எதிர்பார்த்து ஆதரவாய் கரம் பற்றும்போது ஆத்மார்த்தமான அன்பை பரிமாறுகிறார்கள்.

தங்கள் சேவையின் சிறப்பை தனது குடும்பத்தில் குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை கடத்துகிறார்கள். சாப்பிடுவதற்கு முன் யாராவது ஒருவருக்கு உணவைக் கொடுத்துவிட்டுதான் சாப்பிட வேண்டும் என்பதை இயல்பிலே குழந்தைகளிடத்தில் விதைத்து விட்டால் வயதான காலத்தில் பெற்றோரை அனாதையாக தவிக்க விடமாட்டார்கள்.

உறவுகளை நேசிக்காது போகமாட்டார்கள். பிறருக்கு தீங்கு செய்ய நினைக்கவே மாட்டார்கள். மேலும் ஒரு வட்டத்திற்குள் சுருங்கிய பெண்கள், குடும்ப அழுத்தம், மன அழுத்தத்தில் வரும் பெண்கள், கீழ் மட்டத்தில் இருப்பவர்களை களத்தில் நேரில் பார்க்கும்போது, தங்கள் பிரச்சனை ஒன்றுமே இல்லையென உணர்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நம் வாழ்க்கையில் அனைத்தும் மாறலாம். அதனால் அன்பு செய்யத் தயங்காதீர்கள். காரணம் அதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலே போகலாம் என அழுத்தமாய் சொல்லி புன்னகையோடு விடை பெற்றார்” சலீம்.

“நான் முதுகலையில் லேபர் ரிலேஷன்ஷிப் மற்றும் பெர்ஷனல் மேனேஜ்மென்ட் முடித்து இப்போது மூன்று குழந்தைகளுக்கு தாய்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ‘அணையா அடுப்பில்’ முக்கிய பொறுப்பு வகிக்கும் ஷஹனாஸ் சையத்.“ஒருநாள் ஒரு பெண்ணை உணர்வற்ற நிலையில்  நடைபாதையில் பார்த்தேன். ஒரு குவளை குளிர்பானத்தில் அவர் எழுந்து உட்கார்ந்தார். அடிப்படை இங்கே பசி. உணவு தயாரிப்புக்கான திட்டமிடல், உணவுப் பொருள் இருப்பை சரிபார்த்தல், பெண்களில் யார் யார் இன்று சமைக்க வருகிறார்கள் என அறிந்து ஒன்றிணைப்பது என எனக்கு இங்கு வேலைகள்.

வீட்டு வேலைகளை காலையிலே முடித்துவிட்டு 10 மணிக்கு வந்தால் 12 மணிக்குள் சமைத்து பேக் செய்து தேவையானவர்களுக்கு கொடுப்பதற்காக கிளம்பி விடுவோம். பெண்கள் பங்களிப்பு இதில் அதிகம். இங்கே வரும் பெண்கள் வாரத்தில் ஒரு நாளாவது வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். எந்த ஒரு வேலையையும் விரும்பிச் செய்தால் அதுவே நமக்கு ஃபேஷனாகும். கூடவே இதில் பலரின் அன்பும் ஆசிர்வாதமும் நமக்கு
கிடைக்கிறது.

என் குடும்பத்திலும் அம்மா, உடன் பிறந்தவர்கள், உறவினர், நண்பர்கள் என பலரிடமும் திட்டம் குறித்துப் பேசி அவர்களையும் இதில் இணைத்துள்ளேன். அவர்களும் வீட்டில் சமைக்கத் தொடங்கும்போதே ஒரு பிடி எடுத்து தானத்திற்காக வைக்கிறார்கள். நமது எண்ணங்கள் தானே வாழ்க்கை. நல்ல எண்ணங்கள் ஒன்றிணைந்து, பல கைகள் சேரும்போது பெரும் சேமிப்பாகிறது.

மனிதநேயம் என்பது வசதி வந்ததும் உதவுவது அல்ல வறுமையிலும் பகிர்வது. இங்கே பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நம் பெண்களுக்கு தலைமைப் பண்பு அதிகம். சரியான முறையில் திட்டமிட்டு இந்தக் கிச்சனையும் வழி நடத்துகிறார்கள். பெண்களை விட சிறப்பாக இதை யாராலும் செய்யவும் முடியாது. பசின்னு யார் கையேந்தினாலும் அது மிகப் பெரும் கொடுமை. எனவே 500 நபர்கள் என்பதை 1000ம் ஆக்கும் முயற்சியிலும் இருக்கிறோம்.

அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை. பாசத்துடன் ஒரு பார்வை. அக்கறையுடன் ஒரு வார்த்தை. அவ்வளவே. சாலையில் இருப்பவர்களை நித்தம் தேடி உணவு கொடுக்கும்போது, தொடர்ந்து நம்மை பார்ப்பவர்கள் அவர்கள் குறித்து பேசத் தொடங்குகிறார்கள். சிலர் மனக்குறைகளைத் தீர்க்கத் தேவையில்லை. தோள்களில் சாய்த்து தலைவருடி கேட்க ஓர் உறவிருந்தாலே போதும். இதில் சிலரை அவர்கள் குடும்பத்தில் சேர்க்க முடிகிறது. அல்லது தேவையான உதவி, மருத்துவ உதவிகளைச் செய்து மீட்டெடுக்க முடிகிறது.

நாங்கள் அனைவரும் இங்கே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று சொன்ன ஷஹனாஸ், தொற்று நோய் நேரம் என்பதற்காக ஓடி ஒளிந்தால் ஒன்றும் முடியாது. அதற்கான முன் எச்சரிக்கையோடு ஆக்கபூர்வமாய் களத்தில் செயல்படுகிறோம். இந்த அணையா அடுப்பு விடாமல் தொடர்ந்து எரிய வேண்டும் என்பதே எங்களின் ஆசையும்” என விடைகொடுத்தார்.அன்பு என்பது சொற்களில் வாழ்வ தில்லை. அது செயல்களால் வடிவம் தருவது.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!