×

மதுரை - சென்னையை 6 மணி 40 நிமிடத்தில் கடந்து வைகை எக்ஸ்பிரஸ் சாதனை : டிரைவருக்கு பாராட்டு

மதுரை : நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட மதுரை - சென்னை இடையில் உள்ள தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து வைகை எக்ஸ்பிரஸ் சாதனை படைத்துள்ளது.வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை - சென்னை இடையே பகல் நேர விரைவு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், கடந்த 1977. ஆக.15ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு சென்னை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோல், சென்னையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை வந்தடையும். மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள்.

கடந்த 3ம் தேதி மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, காலை 7.26 மணிக்கு புறப்பட்டது. இருப்பினும், சென்னைக்கு சென்றடைய வழக்கமான நேரமான பிற்பகல் 2.07 மணிக்கு சென்றடைந்தது. அவ்வகையில், மதுரை - சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
ரயில்வே ஆர்வலர் அருண்பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘இந்திய ரயில்வேயில் இந்த பயண வேகம் வரலாற்று சாதனையாகும்.

வைகை எக்ஸ்பிரஸ் முன்னதாக தொடங்கப்பட்ட நாளான 1977ம் ஆண்டு, 7 மணி 05 நிமிடங்கள் கடந்து சாதனை படைத்திருந்தது. இதுதான் முந்தைய சாதனையாக இருந்தது. கடந்த நாற்பத்தி நான்கரை ஆண்டுகள் கழித்து இச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 300 கி.மீ. தூரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் 25 நிமிட தாமதத்தை சரி செய்து, தெற்கு ரயில்வே சாதனை படைத்திருக்கிறது. ரயில்வேயின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பின்றி இது சாத்தியமில்லை” என்றார்.

டிரைவர் ரவிசங்கர் கூறுகையில், ‘‘கடந்த 2005ல் ஆந்திராவில் பணியில் சேர்ந்தேன். 2010ல் ஈரோட்டில் சரக்கு ரயில் ஓட்டினேன். அதனைத்தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவராக 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 3ம் தேதி வைகை ரயில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 21 நிமிடம் காலதாமதாக மதுரையில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலை பொறுத்தவரை, வண்டியின் கால அட்டவணை எப்போதும் ஓட்டுனருக்கு மிகவும் சவாலான அளவுக்கு இருக்கும்.

எங்காவது காலதாமதமானால், அந்த நேரத்தை சரிக்கட்ட முடியாது. ஆனால் அன்று வைகை 21 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டாலும், ரயில், சென்னைக்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றடைந்தது. என்னுடன் டிரைவர் குபேந்திரனும் விழுப்புரம் வரை இயக்கினார். இந்த சாதனையில் மற்ற ஊழியர்களின் பணியும் உள்ளது” என்றார்.

Tags : Madurai ,Chennai , Madurai, Vaigai Express, Chennai-Madurai, Vaigai Exp
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...