இணைப்பு தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்

*பயணிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில் :  நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே உள்ள மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த ரயில் நிலையம் வழியாக நாகர்கோவிலில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேளி, கொல்லம் மெமு ரயில், கோட்டயம் போன்ற பயணிகள் ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஹப்பா வாராந்திர ரயில்களும் நின்று செல்கின்றன. திருச்சி - திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயங்கும் இன்டர்சிட்டி ரயிலும் இங்கு நின்று செல்கிறது.

  டவுன் ரயில் நிலையத்தை மேம்படுத்தி கிராசிங் ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்பது குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருந்தது. நடைமேடையில் இருந்து ரயில் ஏற பயணிகள் பெரும் சிரமப்பட்டனர். இங்கு ஒரே ஒரு பிளாட்பாரம் மட்டும் இருந்த நிலையில், கடந்த 2010 ல் ₹5 கோடி செலவில் இந்த ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தன.

இந்த மேம்பாட்டு பணிகளின் போது கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணியும் நடந்தது. ஏற்கனவே இருந்த பிளாட்பாரத்தை 2 வது பிளாட்பாரமாக பயன்படுத்தும் வகையில், முதல் பிளாட்பாரம் புதிதாக அமைக்கப்பட்டது.

முதல் மற்றும் 2 வது பிளாட்பாரத்துக்கு செல்ல நடைமேடை அமைக்கப்பட்டது. இரு பிளாட்பாரங்களில் பயணிகள் அமர இருக்கைகள், குடிநீர், மேற்கூரை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையத்தில் பல முக்கிய ரயில்கள் நின்று செல்ல வசதியாக ஏற்கனவே இருந்த பழைய பிளாட்பாரத்தில் (தற்போது 2வது பிளாட்பாரமாக உள்ளது). தண்டவாளங்களை சமன் செய்யும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதல் பிளாட்பாரத்தில் இருந்து நேற்று முதல் சோதனை ஓட்டமாக ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன.

நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற  இன்டர்சிட்டி ரயில் இந்த பிளாட்பாரம் வழியாக சென்றது. சுமார் 2 கி.மீ. தூரம் தற்போது இணைப்பு தண்டவாளங்கள் முடிவடைந்து உள்ளதால், முதல் பிளாட்பாரத்தில் இருந்து ரயில்கள் செல்ல தொடங்கி உள்ளன.

இனி 2வது பிளாட்பாரத்தில் பழைய தண்டவாளங்களை மாற்றி விட்டு, புதிதாக சமன் நிலையில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு தண்டவாளம் அமைக்கப்பட்டால் அதிக பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அதிகாரிகள் கூறினர்.

 டவுன் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்பாரத்துக்கு செல்ல, நடைமேடையை தான் பயணிகள் பயன்படுத்தினர். பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர். தற்போது புதிதாக அமைக்கப்பட்ட  முதல் பிளாட்பாரத்தில் இருந்தே ரயில்கள் இயங்க தொடங்கி இருப்பது, பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: