×

தரமான கல்விதான் ஒருவரின் உயர்வுக்கு துணையாக இருக்கும்: சிஷ்யா பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தரமான கல்விதான் ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும் என சிஷ்யா பள்ளி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.சென்னை சிஷ்யா பள்ளி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், சிஷ்யா பள்ளியின் அறங்காவலர் சலீம் தாமஸ், பள்ளியின்  முதல்வர் ஓமனா தாமஸ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
பொன்விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:  கல்வி என்பது மனித சமுதாயத்தினுடைய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கிறது. தரமான கல்விதான், ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய கல்வியினை வழங்கும் நிறுவனமாக இந்த சிஷ்யா பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

குழந்தைகளிடம் இருந்து குழந்தை பருவம் களவாடப்பட கூடாது என்பது தாமஸின் சிந்தனை. அப்படிப்பட்ட இந்த பள்ளியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்த பள்ளியில் எனது பேரன், பேத்தியும் கூட படித்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு வந்தவுடன் ஒரு எண்ணம் வந்தது. பேரனையும், பேத்தியையும் உடனே பார்த்தேன். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில், அவர்களை அடிக்கடி என்னால் பார்க்க முடியாது. இது மாதிரி, பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடியும்.
இந்த பள்ளியில் அவர்கள் படித்து கொண்டிருப்பது உள்ளபடியே எனக்கு பெருமையாக இருக்கிறது. எனது பேர பிள்ளைகள் மட்டுமல்ல, இந்த பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள்தான், என்னுடைய அன்புக்குரியவர்கள் தான், என்னுடைய பாசத்திற்குரியவர்கள்தான்.

அதனால்தான் தரமான கல்வியை நமது அரசு - இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு, பல்வேறு திட்டங்களை அதற்காக செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்கு தெரியும். அண்மையிலே கூட, எனது பிறந்தநாளன்று ‘நான் முதல்வன்’ என்ற ஒரு திட்டத்தை நான் அறிமுகம் செய்தேன். நீங்கள் எல்லோரும் அந்த செய்திகளை பார்த்திருப்பீர்கள். Coding, Robotics போன்ற எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்த திட்டம். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் என்று அதை சொல்லலாம்.கல்வி கற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிட சிந்தனை. அந்த சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை, ‘திராவிட மாடல்’ அரசு என்று நான் சொல்லி கொண்டு வருகிறேன். அந்த வகையில், நமது அரசின் முழக்கம்தான், இந்த சிஷ்யா பள்ளியின் முழக்கமாகவும் இருக்கிறது. அதுதான், ‘Aspire and Excel’. இவ்வாறு கூறினார்.



Tags : Chief Minister ,MK Stalin ,Shishya School Golden Jubilee , Quality education Will complement one’s rise: Chief MK Stalin’s speech at the Shisha School Golden Jubilee event
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...