×

14 கோடி ரியல் எஸ்டேட் மோசடியில் 10,000 பேர் பாதிப்பு நிவாரணம் தர ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் ஆணையம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில்  நீதிபதி ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காஞ்சிபுரத்தில் உள்ள அகிலாண்டீஸ்வர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதம்  ₹400 வீதம் 50 மாதங்களுக்கு பணம் கட்டினால் செய்யாறு பகுதியில் அரை  கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும் மாதம் ₹300 வீதம் 50 மாதங்களுக்கு  பணம் கட்டினால் திருச்சியில் அரை கிரவுண்ட் நிலம் கிடைக்கும் என்றும்  திருச்சியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் கடந்த 2007ல்  அறிவித்தனர். இதையடுத்து, அந்த திட்டத்தில் மாதம் ₹400 மற்றும் ₹300  என்ற அடிப்படையில் 50 மாதங்களுக்கு ஏராளமானோர்  பணம் கட்டினர். ஆனால்,  அவர்களுக்கு நிலத்தை கிரயம் செய்து தராமல் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர்  ஏமாற்றி விட்டனர்.

 இதேபோல் திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, நெல்லை ஆகிய  இடங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் சுமார் ₹14 கோடிவரை பணத்தை  வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட  காஞ்சிபுரம் சர்வதீர்த்த மேல்கரையை சேர்ந்த ஆர்.வரதராஜன் சிவகாஞ்சி  போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த  சங்கரசுப்பிரமணியன், அவரது மகன் சுதாகர், அந்த நிறுவனத்தை சேர்ந்த  செல்வராஜ், பிரகாஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் மீது  மோசடி வழக்கு பதிவு  செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சங்கரசுப்பிரமணியனும்,  சுதாகரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த  உயர் நீதிமன்றம் இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த 2015ல்  உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் புகார்தாரர் வரதராஜன்  சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், டி.கென்னடி ஆகியோர் ஜாமீன் வழங்க  எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:பாதிக்கப்பட்ட  2206 பேர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோரியுள்ளனர். நிறுவனத்துக்கு  சொந்தமான 21 சொத்துக்களில் 5 தவிர மற்றவற்றின் மதிப்பு சந்தை மதிப்பில்  தற்போது ₹10 கோடியாகும். வருமான வரித்துறை ரூ.6 கோடி மதிப்புள்ள  சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. இடையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் வாதிடும்போது ₹14 கோடி மோசடி நடந்துள்ளது. 10 ஆயிரம் பேர்  ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு  பணத்தை செட்டில் செய்வதற்காக ஏற்கனவே உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி  கே.சந்துரு ஒரு நபர் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். 4 ஆண்டுகள் முடிந்த  நிலையில் அந்த ஆணையத்தால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த  நிலையில், தற்போது இந்த விஷயத்தை செட்டில் செய்ய தயாராக உள்ளதாக  மனுதாரர்களில் ஒருவரான சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பிரச்னையை  தீர்த்துவைக்க ஓய்வு ெபற்ற நீதிபதி என்.கிருபாகரனை இந்த நீதிமன்றம்   நீதிபதி ஆணயராக நியமனம் செய்கிறது. அவர் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை,  ஆவணங்களை பெற்று பரிசீலித்து நிலம் அல்லது பணத்தை திரும்ப தர உரிய  நடவடிக்கைகளை எடுத்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும். நிறுவன உரிமையாளரான  சுதாகர் நீதிபதி ஆணையத்திற்கு உரிய ஒத்துழைப்பை தரவேண்டும் என்று  உத்தரவிட்டார்.





Tags : Kirubakaran ,ICC , 10,000 affected by 14 crore real estate scam Relief Quality Retired Judge Commission headed by Kirubakaran: ICC order
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது