திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் மீதான நில விவகார வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 2020 மார்ச் மாதம் இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், 2019 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இதயவர்மனுக்கு பணம் கொடுத்து உதவாததால், கோவில் நிலத்தை தான் ஆக்கிரமிக்கவுள்ளதாக பொதுமக்களிடையே அவதூறு பரப்பி தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த இதயவர்மன் ஆட்கள் நிலத்தை சேதப்படுத்தியது  தொடர்பாக குமார் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு திருப்போரூர் தாசில்தாரர் பரிந்துரைத்தார். இதை எதிர்த்து குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் இந்த நில விவகாரத்தில் தலையிட கூடாது என்று அப்போதைய திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்டிருத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது சிவில் வழக்கு. சிவில் நீதிமன்றத்தை தான் அணுக முடியும். இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: