×

அம்பை வாகைபதியில் அய்யா வைகுண்டர் 190வது அவதார தினவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அம்பை: அம்பை வாகைபதியில் அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினவிழா மற்றும் மாசி மகா ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் அய்யா வைகுண்டர் 190வது அவதார தினவிழா நடந்தது. இதை முன்னிட்டு அம்பை வாகைபதி அய்யாவழி பக்தர்கள் மற்றும் அம்பை சுற்று வட்டார அன்புகொடி மக்கள் சார்பில் அவதார தினவிழா மற்றும் மாசி மகா ஊர்வலம் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் வந்து, அம்பை கிருஷ்ணன் கோவில் திடலை அடைந்தனர்.

வாகை குளம் வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன்னின்று முறை நடத்தும் இந்த ஊர்வலத்தில் அகஸ்தியர்பட்டி, தெற்கு பாப்பான்குளம், பாபநாசம்,  ஊர்க்காடு, அயன்சிங்கம்பட்டி,  முக்கூடல், விகேபுரம், அம்பை, வைராவிகுளம், அடைச்சாணி, ஆழ்வார்குறிச்சி, அடையகருங்குளம் உள்ளிட்ட 40 அய்யா வழி பதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி வந்தார். சிறுவர், சிறுமியர் கோலாட்டம் மற்றும் இளைஞர்களின் செண்டை மேளம் முழங்க அய்யா அரோகரா கோ‌ஷத்துடன் ஊர்வலம் தொடங்கியது.

இதனால் அம்பை பாபநாசம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. மாசி மகா ஊர்வலமானது அம்பை மெயின் ரோடு வழியாக வாகைபதி சென்றடைந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வாகன வசதியும் செய்யப்பட்டு இருந்தது, விழா ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைபதி அய்யா வழி பக்தர்கள் மற்றும் அம்பை சுற்று வட்டார பகுதி அன்பு கொடி மக்கள் செய்திருந்தனர். மேலும் அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Ayya Vaikundar ,Incarnation Day ,Ambai Vagaipathy , Ayya Vaikundar 190th Incarnation Day at Ambai Vagaipathy: Thousands attend
× RELATED அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: அம்பையில் மாசி மகா ஊர்வலம்