×

அவதூறு வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற கோரிய கவிஞர் லீனா மணிமேகலையின் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை  திரைப்பட இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக மீ டு புகாரை தெரிவித்ததை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

 அதில், தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார். சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இது போல ஒரு தகவலை பரப்பி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டம் அவதூறு  பிரிவின்கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கு விசாரணையின் போது லீணா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சுசிகணேசன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நான்கு மாதத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

 இந்த நிலையில் சைதாப்பேட்டை ஒன்பதாவது  மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது வேறு மாஜிஸ்திரேட் வழக்கை விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குனர் சுசிகணேசன் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை இழுத்தடித்துவருவதாகவும், வழக்கை மேலும் தாமதப்படுத்தவேண்டும் என்பதற்காகவே இதுபோல் வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், எனவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிபதிக்கு எதிராக லீனா மணிமேகலை கூறியுள்ளார். எனவே இந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Poet ,Leena Manimegala ,Chennai Sessions Court , Poet Leena Manimegala's petition seeking dismissal of defamation suit dismissed by Chennai High Court
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...