×

அரியலூர் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், தங்க காப்பு கண்டுபிடிப்பு

அரியலூர்: அரியலூர் அருகே மாளிகைமேட்டில் அகழாய்வு பணியில் சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், தங்க காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள, சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில்  தமிழக தொல்லியல் துறை மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த பணியின்போது கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இந்நிலையில் இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது 10க்கு 10 என்ற சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், இரும்பினாலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்றவை கிடைத்துள்ளன.

கையில் அணியும் காப்பு போன்ற தங்கத்தினாலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த காப்பு சுமார் 7.920 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4 மி.மீட்டர் என்ற அளவிலும் உள்ளது.

Tags : Palace of the Kings of Coolah ,Ariyalur Manchedu , Surrounding walls of the palace of the Chola kings and the discovery of gold armor during the excavations at the Ariyalur Palace
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...