×

தஞ்சை காந்திஜி சாலையில் கல்லணை கால்வாய் குறுக்கேபுதிய பாலம் கட்டும் பணி துவக்கம்

தஞ்சை : தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திஜி சாலை மிக முக்கியமான பகுதியாகும். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட், மெடிக்கல் காலேஜ், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, மாரியம்மன்கோவில், மருங்குளம் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்த சாலை வழியாக செல்லும் கல்லணை கால்வாயின் (புது ஆறு) குறுக்கே இர்வீன் பாலம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக முன்பே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுப்பணிகளும் மேற்கொண்டனர். தொடர்ந்து பாலம் கட்டுவதற்காக அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையடுத்து கல்லணை கால்வாயின் குறுக்கே 37 மீட்டர் நீளத்தில் 2 பாலம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு பாலமும் தலா ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. பின்னர் புதிய பாலம் கட்டுவதற்கு வசதியாக கல்லணை கால்வாய் கரையில் போடப்பட்டுள்ள நடைபாதை மற்றும் நடைபாதையின் இருபுறமும் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை பொக்லேன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

பாலம் கட்டுவதற்கு தேவைப்படும் அளவுக்கு நடைபாதை அகற்றப்பட்டதுடன் தரைகள் சமப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், புதிய பாலம் கட்டும் பணிகளை 3 மாதத்தில் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Kallanai Canal ,Tanjore Gandhiji Road , Thanjavur,Kallanai Dam,Bridge Work, Bridge Construction
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...