×

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் பதவி ஏற்பு: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வாழ்த்து

சென்னை: சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா மற்றும் துணை மேயராக மு.மகஷே்குமார் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், அவர்கள் உடனடியாக பதவி ஏற்றுக் கொண்டனர். சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டி இருந்தால், 4ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். இந்நிலையில், சென்னை  மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ்குமாரும் திமுக சார்பில்  போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து நேற்று காலை மேயரை  தேர்ந்தெடுக்கப்பதற்காக மாநகராட்சி மாமன்ற கூட்டம் காலை 9.30 மணிக்கு கூடியது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் சுதர்சனம், த.வேலு, தாயகம் கவி பங்கேற்றனர்.

அப்போது மாநராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மேயர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார். அப்போது 74வது வார்டில் போட்டியிட்ட பிரியா மட்டுமே காலை 9.35 மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை 76 வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, 69வது வார்டு கவுன்சிலரான சரிதா மகேஷ் ஆகியோர் வழிமொழிந்தனர். மேலும் ஒரே ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்  செய்ததால் மேயராக பிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக  ஆணையர் அறிவித்த பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு, சென்னை மேயரான பிரியா  நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் சிவப்பு அங்கி, செங்கோல், 105 சவரன் தங்க செயின் வழங்கப்பட்டது.

அதை பெற்றுக் கொண்ட அவர் அங்கியை அணிந்து வந்தார். அவருக்கு முன்பாக மேயர் வருகிறார் என்று சொல்லிக் கொண்டே செல்ல மேயரான பிரியா மாமன்ற அரங்கிற்குள் வந்தார். அப்போது மேயர் இருக்கையின் அருகே வந்தபோது அவரிடம் வெள்ளியால் ஆன செங்கோலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட மேயர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுக் கொண்ட பிரியா, முதல்வர்  மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள்   பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரணியன், எம்எல்ஏக்கள் சுதர்சனம், தாயகம் கவி, வேலு ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  

அதைத் தொடர்ந்து பிற்பகலில் மீண்டும் துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் தொடங்கியது. அதைப்போன்று மாநகராட்சி ஆணையர் துணை மேயருக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து 169-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.மகஷே்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு 172வது வார்டு கவுன்சிலரான துரைராஜ், 114வது வார்டு கவுன்சிலர் மதன்மோகன் ஆகியோர் வழிமொழிந்தனர். வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாத நிலையில் மு.மகேஷ்குமார் துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மகேஷ்குமார் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு அவரை அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள், துணை மேயருக்கான இருக்கையில் அமர வைத்தனர். மேலும் அவருக்கு அனைவரும் பொன்னாடை போர்த்தி  வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பிறகு துணை மேயராக இருக்கையில் அமர்ந்த பிறகு மகேஷ்குமார் பேசுகையில், ‘‘திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கும், ேதர்தலை சிறப்பாக நடத்திய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். இதையடுத்து அவரை அமைச்சர்கள், மேயர், ஆணையர் அவரை அழைத்து சென்று அவருடைய அறையில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர். துணை மேயருக்கு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேயருக்கு புதிய கார்
சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா, துணை மேயரான மகேஷ் குமாருக்கு புதிய கார் வழங்கப்பட்டது. இதையடுத்து பதவி ஏற்க வரும் முன்பு தனது சொந்தக் காரில் வந்த அவர்கள், பதவி ஏற்றப் பின்னர் மாநகராட்சி வழங்கிய புதிய காரில் புறப்பட்டு சென்றனர். அதைப்போன்று மாநகராட்சி ஆணையருக்கும் புதிய கார் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக புறக்கணிப்பு
சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடைபெற்ற மேயர், துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். அதே நேரத்தில் அமமுக, பாஜக, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

சென்னைக்கு 3வது பெண் மேயர்
சென்னை  மாநகராட்சியில் ஏற்கனவே தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோர் மேயராக பதவியில் இருந்துள்ளனர். இவருக்கு முன்பாக, அந்த அறையில் உள்ள இருக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி ஆகியோர் அமர்ந்து பணி செய்தது  குறிப்பிடத்தக்கது. சென்ைன மாநகராட்சிக்கு பெண் ஒருவர் மேயராக தேர்வு  செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். அதே நேரம், தலித் பெண் ஒருவர்  மேயராவது சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Tags : Mayor ,Chennai ,Municipality ,Priya ,Deputy ,Makeshkumar ,Ma. Subramanian ,Sakerbabu , Chennai Corporation, Mayor Priya, Deputy Mayor Maheshkumar, Ministers Ma Subramanian, Sekarbabu
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...