×

கும்பகோணத்தின் முதல் மேயரானார் ஆட்டோ டிரைவர்

கும்பகோணம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து கடந்த பிப். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் திமுக 37, காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மார்க்சிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 வார்டிலும், சுயேச்சையும், அதிமுகவினரும் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றனர் . கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் 17வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சரவணனை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்தது.இந்நிலையில் நேற்று காலை கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் பதவிக்கு தேர்தல் நடந்தது. காலையில் நடந்த மேயர் பதவிக்கான தேர்தலில் வேறு யாரும் போட்டி போடாததால், சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் அறித்தார். இதைத்தொடர்ந்து மதியம் நடந்த துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் சு.ப.தமிழழகன் போட்டியின்றி தேர்வானார்.

இதை தொடர்ந்து பதவி பிரமாணம் நடந்தது. கும்பகோணம் மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரை மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய மேயர் சரவணனிடம் வெள்ளி செங்கோல் கொடுத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆட்டோ டிரைவர்: மேயராக பொறுப்பேற்றுள்ள சரவணனுக்கு வயது 42. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நகர துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி அதன் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார்.


Tags : Kumbakonam , Auto driver became the first mayor of Kumbakonam
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...