×

நாகர்கோவில் மாநகராட்சியில் 4 ஓட்டுகள் மாறிய பிரச்னை திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் பதவி அதிரடி பறிப்பு: பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த 4 ஓட்டுகள் மாறி விழுந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனை அதிரடியாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 24 வார்டுகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 7 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. எதிர்க்கட்சிகளில் பா.ஜ. 11 இடங்களையும், அதிமுக 7 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் பெற்றன.மேயர் பதவிக்கு, திமுக சார்பில் 4வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற வழக்கறிஞர் மகேஷ் மேயர்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துணை மேயராக திமுக சார்பில் 33வது வார்டில் போட்டியிட்டு வென்ற  மேரி பிரின்சி லதா அறிவிக்கப்பட்டார். அதிமுக ஆதரவுடன் பாஜ சார்பில் மேயர் வேட்பாளராக திடீரென 29வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலரான முன்னாள் நகராட்சி தலைவரும் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளருமான மீனாதேவ் அறிவிக்கப்பட்டார். நேற்று காலை 9.30 மணிக்கு, நாகர்கோவில் மாநகராட்சி கூட்ட மன்றத்தில் ஆணையரும், தேர்தல் அலுவலருமான ஆஷா அஜித் முன்னிலையில் மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த மகேஷ், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  

தொடர்ந்து பாஜ வேட்பாளர் மீனாதேவ் வேட்புமனு தாக்கல் செய்தார். இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மறைமுக தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. 52 வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயருக்கு நேராக டிக் செய்து, பெட்டியில் போட்டனர். காலை 10.55 மணிக்கு வாக்கு பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மொத்தம் பதிவான 52 ஓட்டுகளில் திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகள் பெற்று மேயராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகள் பெற்றார். மதியம் 2.30 மணிக்கு துணை மேயருக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேரி பிரின்சி லதா மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து திடீரென 9வது வார்டு திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக மனு செய்தார். அவருக்கு பாஜ ஆதரவு கொடுத்தது. பின்னர் வாக்குப்பதிவு முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மேயர் மகேஷ் பெற்று இருந்ததை போல் துணை மேயர் தேர்தலிலும் திமுக வேட்பாளர் மேரி பிரின்சி லதா 28 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து துணை மேயராக மேரி பிரின்சி லதா வெற்றி பெற்றதாக ஆணையர் ஆஷா அஜித் அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

திமுக கூட்டணியில் 32 வாக்குகள் இருந்தன. அதில் 4 வாக்குகள் பாஜவுக்கு மேயர், துணை மேயர் தேர்தலில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் திமுகவினர் போட்டியிட்டனர். அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று அறிவித்த சில நிமிடங்களில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரேஷ்ராஜனை நீக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பிலிந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக நாகர்கோவில், நீதிமன்ற சாலையைச் சேர்ந்த ஆர்.மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று கூறியுள்ளார்.



Tags : DMK District ,Suresh Rajan ,Nagercoil , Problem with 4 votes changing in Nagercoil Corporation DMK District Secretary Suresh Rajan's post-action flush: Order of General Secretary Duraimurugan
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!