×

ஆஸி. சுழல் நட்சத்திரம் ஷேன் வார்ன் திடீர் மரணம்

பாங்காக்: ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டனும் மகத்தான சுழற்பந்துவீச்சாளருமான ஷேன் வார்ன் (52 வயது), மாரடைப்பால் நேற்று காலமானார்.கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான லெக் ஸ்பின்னராக முத்திரை பதித்தவர் ஷேன் வார்ன். ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் விக்கெட் வேட்டையில் இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்) அடுத்து 2வது இடத்தில் வார்ன் உள்ளார். 194 ஒருநாள் போட்டியில் 293 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 1999ல் உலக கோப்பையை வென்ற ஆஸி. அணியிலும் விளையாடியவர்.ஐபிஎல் டி20 தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றதுடன் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். களத்தில் தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டிய இவர், களத்துக்கு வெளியே தனது வாய்த்துடுக்கு மற்றும் பாலியல் தொடர்புகளால் சர்ச்சை நாயகனாகவும் விளங்கினார்.

தாய்லாந்தின் கோஹ் சாமுய் தீவில் தனக்கு சொந்தமான சொகுசு மாளிகையில் தங்கியிருந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். சுயநினைவற்று மயங்கிய நிலையில் இருந்த ஷேன் வார்னுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ள குடும்பத்தினர், இந்த சோகமான தருணத்தில் தங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் விரைவில் மேலதிக விவரங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ஷேன் வார்ன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு நாயகரான ஷேன் வார்ன் தீடீர் மறைவால் அதிர்ச்சியுற்றேன். ‘மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார்’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓர் உண்மையான விளையாட்டு மேதையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Aussie ,Shane Warne , Aussie. Spiral star Shane Warne's sudden death
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...