×

சோலையார் அணை நீர்மட்டம் சரிவு: பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கவலை

வால்பாறை: வால்பாறை பகுதியில் வழக்கமாக பெய்யவேண்டி கோடை மழை பொய்த்து வரும் நிலையில் அணைகள், நீரோடைகள், குட்டைகள், குளங்களில் நீர் வற்றி வருகிறது. நீர் ஆதாரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான வால்பாறை, அக்காமலை புல்மேடு, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்யாமல் உள்ளதால்  பி.ஏ.பி மற்றும் மின்வாரிய அணைக்கட்டுகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.

பி.ஏ.பி. பாசன திட்டத்திற்கு உதவியாக  உள்ள உடுமலை திருமூர்த்தி அணை, அமராவதி அணை, வால்பாறை பகுதியில் உள்ள மேல் நீராறு அணை, கீழ் நீராறு அணை, சோலையார் அணை, காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை, டாப்சிலிப் பகுதியில் பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணை ஆகிய அணைகள் அனைத்திற்கும் நீர் வரத்து குறைந்த வண்ணம் உள்ளது.  அணைகளுக்கு நீர்வரத்து மழை இல்லாத போது இயற்கை ஊற்றுகளில் சுரக்கும் நீரே ஆறுகளில் நீர்வரத்து ஆகும்.

வால்பாறை பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை புல்மேடு பகுதியில் கோடை மழை இல்லாமல் இயற்கை ஊற்றுகள் வற்றி நீர்வரத்து இல்லாமல், நீர் குறைந்தும் காணப்படுகிறது. காட்டாறு ஊற்றுகளும் வற்றி உள்ளது. எனவே அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் சோலையார் அணை நீர்மட்டம் பெருமளவு சரிந்துவிட்டது. நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு வினாடிக்கு 20 கன அடி நீர் வரத்து உள்ளது.

165 அடி நீர் மட்டம் உள்ள அணையில், 75 அடி நீர் உள்ளது. அணையில் இருந்து 844  கனஅடி நீர் சோலையாறு மின்நிலையம் இயக்கப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. எனவே அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடை மழை பொய்த்து வருவதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags : Solaiyar Dam , Solaiyar Dam water level decline: BAP Irrigation farmers concerned
× RELATED சோலையார் அணை அருகே பெண் யானை உடல் மீட்பு