×

ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ராஜவாய்க்கால் தொடங்கி, மோகனூரில் சென்றடைகிறது. இந்த வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் வாழை, வெற்றிலை சாகுபடி  செய்யப்படுகிறது. ராஜவாய்க்காலில் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளின் ஒட்டுமொத்த சாக்கடை கழிவுநீர் முற்றிலுமாக கலப்பதால், வாய்க்காலில் தண்ணீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜவாய்க்காலை தூர்வாரும் பணிக்காக, அரசு ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொத்தனூரில் இருந்து ராஜவாய்க்காலின் கடைமடை பகுதியான நன்செய் இடையாறு வரை, சுமார் 11 கிலோ மீட்டர் தூரமும், பொய்யேரி வாய்க்காலில் 5 கிலோ மீட்டர் தூரமும் என 16 கிலோமீட்டர் தூரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஓரிரு நாட்களில் முடித்து, மார்ச் 7ம் தேதி மீண்டும் பாசனத்திற்காக ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் துணைத்தலைவர் குப்புதுரை மற்றும் பெரியசாமி ஆகியோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிக்காக அரசு ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள ராஜவாய்க்காலின் குறுக்கே, டூவீலர்கள் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தை, அகலப்படுத்தி சரக்கு ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்லும் பாலமாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும், பரமத்திவேலூர், போத்தனூர், பாண்ட மங்கலம், வெண்கரை ஆகிய பேரூராட்சிகளின் சாக்கடை கழிவுநீர், ராஜவாய்க்கால் கலக்காமல் சுத்திகரிப்பு செய்து, வாய்க்காலில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Rajavaikkal ,Jaderpalayam dam , Commencement of dredging work at Rajavaikkal in the Jaderpalayam dam area
× RELATED புதர்கள் மண்டிக்கிடக்கும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால்