×

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடியை உடனடியாக சீர் செய்ய கோரிக்கை சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலம் கட்டுவது எப்போது?.. தரைப்பாலம் அடித்து சென்றதால் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம்

வேலூர்: சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் பாலம் கட்டுவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருவதாலும், ஏற்கனவே இருந்த சிறிய தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்து சென்றதால் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நீதிமன்றம், ஆவின் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இதேபோல் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இருபகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேலூர் வழியாக 10 கி.மீ. சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும். இதற்கு 2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நபார்டு, கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ₹7.50 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு காங்கேயநல்லூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த தரைப்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

வேகமாக வளார்ந்து வரும் வேலூர், காட்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்திலிருந்து இந்த சாலை தொடங்கி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பாலத்துக்கு ஏற்கனவே உள்ள சாலைகளை பயன்படுத்த முடியாது என்பதாலேயே ரங்காபுரம் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாலாற்றின் குறுக்கே 500 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலம் அமைப்பதற்காக பிரம்மபுரத்தில் 26,908 சதுர மீட்டர், சத்துவாச்சாரியில் 24,322 சதுர மீட்டர், காங்கேயநல்லூரில் இணைப்புச் சாலைக்காக 18,184 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. பாலம் கட்டுவதற்கு மட்டும் ₹27 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் சத்துவாச்சாரி முதல் புதிய பஸ்நிலையம் வரை பாலாற்றங்கரை ஓட்டி இணைப்புச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் தனியாருக்கு சொந்தமான இடங்கள் அதிகளவில் வருகிறது. இதனால் அந்த இடங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு சார்பில் ₹22.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாலாற்றங்கரை ஒட்டி அரசு புறம்போக்கு நிலம் அதிகளவில் உள்ளது. அதுவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை கையகப்படுத்தினாலே போதுமான இடம் இணைப்பு சாலைக்கு கிடைத்துவிடும்.

தேவையில்லாமல் தனியாருக்கு சொந்தமான இடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நெடுஞ்சாலைத்துறை மற்றும் அப்போதைய அதிமுக அரசு திட்ட மதிப்பீடு செய்ததில் குளறுபடி செய்துள்ளது. இதனால் இந்த திட்ட பணியை தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய பாலமும் முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்று கொண்டு இருந்தவர்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் வேலூர் வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்
சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் காட்பாடிக்கு பாலாற்று வழியாக அதிகளவில் வந்து சென்று கொண்டு இருந்தனர். தற்போது அவ்வழியாக செல்ல முடியாததால்  அனைவரும் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதால் வேலூரில் இருந்து சித்தூர் பஸ்நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும், சாலை கட்டமைப்பு என்பது பல ஆண்டுகளாக இருக்கும் சாலையாக தான் இருந்து வருகிறது. முக்கிய சாலைகளை விரிவுப்படுத்தவும், மேம்பாலம் கட்டவும் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் தினந்தோறும் வாகன நெரிசலில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Sattuvachari ,Brahmapuram , When will the bridge between Sattuvachari and Brahmapuram be built?
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது