×

திருச்சுழி அருகே கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்தது

திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சியில் கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பரளச்சியை சேர்ந்த பாபு, ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் ஆகியோர், பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் 2 பழமையான துண்டு கல்வெட்டுகளை கண்டெடுத்தனர். இக்கல்வெட்டை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் 2 கல்வெட்டுக்களும் கிபி 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: பிற்கால பாண்டிய மன்னர்களின் தலைசிறந்தவர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1216- 1238). இவர் சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெருமைக்குரியவர். இவர் ஆட்சி காலத்தில் வழிபாட்டு தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கும், சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், கோயில் பராமரிப்புகளுக்கும் பல ஏக்கர்களில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் கோயில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.

சுந்தரவல்லி அம்மன் கோயில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டில் நான்கரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம் 9 வரி கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீமாறன் - ஸ்ரீதிரிபுவன சக்கரவர்த்திகள், ஸ்ரீ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் தேவருக்கு யாண்டு என சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு வரிகளுடன் தொடங்கும் இக்கல்வெட்டில் ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் பெருமாள் கோயிலுக்கு பேரிகை, சங்கு, பூஜை செய்வதற்கான நிலங்களை குறியீடுகளாகவும், அரை மா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் முன்பு குளத்தங்கரையில் உள்ள மற்றொரு கல்வெட்டில் 4 அடி நீளம், 1 அடி அகலம் 6 வரி கொண்ட கருங்கல்லில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லை, குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. இவ்வாறு கூறினர்.

Tags : Tiruchirappalli ,Madurai , Discovery of 2 13th century inscriptions near Tiruchirappalli: belongs to the Sundarapandian period which restored Madurai.
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....