உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற துப்பாக்‍கிச்சூட்டில் இந்திய மாணவர் படுகாயம்!: போலந்தில் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

போலந்து: உக்ரைன் தலைநகர் கீவில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்த போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற துப்பாக்‍கிச்சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கீவில் ஹர்ஜோத்சிங் என்ற இந்திய மாணவர், காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை இந்தியா அழைத்துச்செல்ல கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருப்பதால், அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்‍கிச்சூட்டில் காயமடைந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த கர்நாடக மாணவர் ஒருவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: