×

துறைமுக நகரங்களை கைப்பற்றுகிறது ரஷ்யா: கார்கிவ்வில் தொடர்ந்து கடும் சண்டை

உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் திட்டத்தோடு   ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தி வரும் கடுமையான  தாக்குதலில் கெர்சான்  நகரை கைப்பற்றி உள்ளது. இரண்டாவது பெரிய நகரான  கார்கிவ் நகரை பிடிக்க ரஷ்ய படைகள் உக்ரைன் படைகளுடன் கடும் சண்டையிட்டு வருகிறது. 8வது நாளான நேற்றும் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. கார்கிவ் நகரில் இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது.

தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. சில நாட்களுக்கு முன் கீவ் நகரில் இருந்து 65 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய படைகள் தற்போது கீவ் நகரில் இருந்து 25 கிமீ தொலைவில் நிலை கொண்டு உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தரைவழி, வான் மார்க்கமாக தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் கடற்படையின் உதவியுடனும் தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதில் கருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னொரு துறைமுக நகரான மரியுபோல் நகரை பிடிப்பதற்காக ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளது.  

ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
உக்ரைன் விவகாரம் குறித்து  வெளியுறவு துறையின் ஆலோசனை குழு கூட்டம் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நேற்று நடந்தது.  காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட 9 எம்பி.க்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்  உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும்  நடவடிக்கைகள் குறித்து  அமைச்சர் விளக்கினார்.  இந்த கூட்டத்துக்கு பிறகு மூத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். இந்திய மாணவர்களை மீட்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெய்சங்கர் விளக்கி கூறினார்.  சிறப்பான விவாதம் நடந்தது.  நாம் அனைவரும்  இந்தியர்கள். நாட்டு நலன்தான் நமக்கு முக்கியம் என்ற உணர்வு ஞாபகத்துக்கு வருகிறது,’’ என்றார். சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘‘அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்,’’ என்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி வெங்கட சத்யவதி கூறுகையில், ‘‘இன்னும் சிலநாட்களில் உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்கள் மீட்கப்படுவர் என்று அரசு உறுதி அளித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

ரஷ்ய நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனைக்கு எஸ்பிஐ வங்கி தடை
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தனிமைப்படுத்தும் வகையில், அந்நாட்டு மீது கடுமையான பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. குறிப்பாக, பணபரிவர்த்தனையை முடக்கும் வகையில், ரஷ்யாவின் மிகப்பெரிய 4 வங்கிகள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக வெளிநாட்டு கரன்சிகளை ரஷ்யாவில் பயன்படுத்த அந்நாட்டு தடை விதித்து உள்ளது.

பாரத் ஸ்டேட் வங்கி, ரஷ்யாவில் கமர்ஷியல் இண்டோ பாங்க் என்ற கூட்டு முயற்சியில்  இயங்குகிறது. அங்கு கனரா வங்கி 40 சதவீத பங்குகளுடன் மற்றொரு பங்குதாரராக  உள்ளது. இந்நிலையில், பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய நிறுவனங்களுடன் தொடர்புடை பணபரிவர்த்தனை எஸ்பிஐ நிறுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அல்லாமல் வேறு வழியில் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறி உள்ளது.

வெளியேற மறுக்கும் இந்தியர்கள்
உக்ரைனின் முக்கிய நகரங்களை ஒவ்வொன்றாக பிடித்து வரும் ரஷ்ய படைகள், இந்த நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவை பிடிப்பதற்காக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அருகில் உள்ள சுமி நகரத்தையும் தாக்குகிறது. இங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு விமானங்களை இயக்கி வந்த போதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த நகரங்களை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அவர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தி இருக்கிறது.


Tags : Russia ,Kharkiv , Port city, Russia, Kharkiv, heavy fighting
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...