முதல்முறையாக ரோகித் தலைமையில் மொஹாலியில் முதல் டெஸ்ட்: இந்தியா-இலங்கை மோதுகின்றன

மொஹாலி: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்த இரு அணிகளும் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.  பல்வேறு சிறப்புகளுடன் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை  மொஹாலியில் தொடங்குகிறது.

புது டெஸ்ட்  கேப்டன்  ரோகித் சர்மா தலைமையில் முதல் முறையாக இந்திய அணி களம் காண உள்ளது. கூடவே முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லிக்கு இது 100வது டெஸ்ட்.  ஷூப்மன் கில்லுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைத்தால் அவர் இந்தியாவில் விளையாடும் முதல் டெஸ்ட்  இது. காயத்தில் இருந்து மீண்ட அஷ்வின்  அணிக்கு திரும்பியுள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக விளையாடி வந்த ரகானே, புஜாரா, இஷாந்த் ஆகியோர்  அணியில் இல்லை. அந்த இடங்களில் விளையாடப் போவது  ஷ்ரேயாஸ், ஹனுமா விகாரி, ஷூப்மன் கில், ஜடேஜா ஆகியோரில் யார் என்ற கேள்வி தொடர்கிறது.

பந்து வீச்சாளர்களிலும் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வியுடன் பெரும் படை காத்திருக்கிறது. வெற்றிக்கான இலக்குடன் அணியை திராவிட் களமிறக்குவார். திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு ‘யாருக்கு இடம் ’ என்ற கேள்விகள் அதிகம் எழும்ப வாய்ப்பில்லை.  வேகம் மெண்டீஸ் இன்னும் குணமாகவில்லை. வேகம் சுரங்கா லக்மலுக்கு  இது கடைசித் தொடர் என்பதால் கட்டாயம் விளையாடுவார். அவருடன் கருணரத்னே, எம்புள்டேனியா, ஜயவிக்ரமா, டி சில்வா, சண்டிமால், நிசாங்கா என போராட தயாராக இருக்கும் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதனால் உள்ளூரில் விளையாடினாலும் இலங்கை இன்று முதல் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

Related Stories: