×

போரை நிறுத்தும்படி உத்தரவிடவா முடியும்?..தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த உச்ச நீதிமன்றமா உத்தரவிட முடியும் என சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி அவசர மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘ரஷ்யா நடத்தும் போரால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்திய குடும்பங்கள், மாணவர்கள் ஆகியோரை உடனடியாக பாதுகாப்பாக மீட்க வேண்டும். மேலும், அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பும் வரையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படி நீதிபதி என்.வி.ரமணாவிடம் மனுதாரர் தரப்பில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் நினைக்கிறாரா?. அது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியாதா?’ என சரமாரி கேள்வி எழுப்பினார். பின்னர், அவர் பிறப்பித்த உத்தரவில், ‘உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு எங்களின் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து விரைவான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரையில் மனுதாரர் காத்திருக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

Tags : Chief Justice ,Ramana , Ceasefire, Chief Justice, N.V. Ramana
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...