×

மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம்: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி

சென்னை: மழைநீர் வடிகால் மற்றும் மாசு கட்டுப்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார். சென்னை மேயர் பதவிக்கான வேட்பாளராக திமுகவின் திருவிக நகர் தொகுதி பகுதி துணைச் செயலாளர் ராஜன் மகள் பிரியா (28) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையில் வசித்து வருகிறார். திருவிக நகர் பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் பயின்று பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் எம்.காம் முடித்துள்ளார்.

திருமணமானவர். கணவர் ராஜா ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். 4 வயதில் ஜெலி என்ற மகள் உள்ளார். பிரியாவின் தந்தை ராஜன் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் மைத்துனர். திருவிக நகர்  தொகுதிக்கு உட்பட்ட 74 வது வார்டில் பிரியா போட்டியிட்டு தன்னை எதிர்த்த அதிமுக வேட்பாளரை 6299 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். சென்னை மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பிரியா அளித்த பேட்டியில், ‘‘சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் பணிகளிலும் சென்னையில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசுபடுவதை தடுக்கும் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.

தரமான குடிநீர் வசதி அமைத்துத் தரவும், பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின் பேரிலும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின் படியும் எனது பணியை சிறப்பாக செய்வேன்’’ என்று கூறினார். துணை மேயர்: சைதாப்பேட்டை ரங்கராஜபுரத்தை சேர்ந்த மு.மகேஷ்குமார் (51) சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு படித்துள்ளார். திமுகவில் பல்வேறு கட்சி பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 169-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி சுஜாதா. மகள்கள் பார்கவி, தென்றல்.

Tags : Priya ,Mayor ,Chennai Corporation , Importance of rainwater drainage works: Interview with Priya, Mayor, Chennai Corporation
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...