×

வாழ்நாள் முழுதும் துல்லியமாய் கேட்க கவனமுடன் கேளுங்கள்: உலக காது கேட்கும் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உலக காது கேட்கும் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வம் என அய்யன் திருவள்ளுவர் ‘செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை’ எனச் சொல்கிறார். அத்தகைய செல்வமான செவித்திறன் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற்றாக வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு - விளிம்பு நிலை மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு செயல்பட்ட தன்னிகரில்லாத் தலைவர் கலைஞர் என்பதையும் உணர்த்தும் விதமாக, ‘Cochlear Implant’ சிகிச்சைக்காக அவர் உதவியது குறித்து பிரபல மருத்துவர் மோகன் காமேஸ்வரன், கலைஞருக்கான மருத்துவர்களின் புகழஞ்சலிக் கூட்டத்தில் நெக்குருகிப் பேசியது என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது.

புதிய புதிய ஒலிச் சாதனங்களைப் பயன்படுத்தும் நாம் அவற்றைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்திக்கொள்ள விழிப்புணர்வாக இந்நாள் அமைந்திருக்கிறது. மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் ஆடியோ சாதனங்களில் அதிக ஒலி வைத்து நீண்ட நேரம் கேட்டால், காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, கேட்கும் திறன் இளம் வயதிலேயே குறைய வாய்ப்புண்டு என மருத்துவர்களும் அறிவியலாளர்களும் விடுக்கும் எச்சரிக்கையைச் சற்றே காது கொடுத்துக் கேட்டிட வேண்டும். வாழ்நாள் முழுதும் துல்லியமாய்க் கேட்கக் கவனமுடன் கேளுங்கள்! ஓய்வு நேரங்களில் இயற்கையோடு இணைந்திருங்கள்! அதிக ஒலி எழுப்பும் சாதனங்களிடமிருந்து விலகி இருங்கள்! எளிய உடற்பயிற்சி செய்யுங்கள்! வருங்காலத்தை உடல் நலத்தோடு உற்சாகமாய் எதிர்கொள்ளுங்கள் என்று இந்நாளில் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,MK Stalin ,World Hearing Day , Listen carefully for the rest of your life: Chief Minister MK Stalin's advice ahead of World Hearing Day
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...