130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதம் வங்கக்கடலில் புயல் சின்னம்: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி, வெயில் கொளுத்தி வருகிறது. இரவில் குளிரும், காலையில் பனிப்பொழிவும் நீடித்து வருகிறது. இருப்பினும், மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மழை பெய்வது எப்போதாவதுதான் நடக்கும்.

இதன்படி, கடந்த 130 ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது மார்ச் மாதத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறியுள்ளது. இது புதுச்சேரிக்கு கிழக்கே 750 கிமீ தொலைவில் நேற்று மையம் கொண்டுள்ள நிலையில், வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுப்பெறும் பட்சத்தில் சிறிய புயலமாக மாறவும் வாய்ப்புள்ளது.

அந்த ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் தற்போது வட இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டு தற்போது அங்கு மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேக மூட்டம் அதிகரிக்கும். இதையடுத்து, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், கடலோர  தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்யும்.

இதையடுத்து, நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். 6ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வேகம் வரை வீசும். இதே நிலை 6ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். ஆழ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: