×

விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம் திருநங்கையாக மாறிய 21 வயது மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்: உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி (46), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி அமுதா, நகராட்சி துப்புரவு பணியாளர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் நிஷாந்த்(21), விருத்தாசலம் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்பு இவரை திருச்சி அருகே ஒரு தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிற்கு வந்த இவர், வீட்டில் பெண்கள் செய்யும் சமையல் வேலை உள்ளிட்ட பல வேலைகளை செய்துகொண்டு பெண்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் விசாரித்ததில் அவருக்கு தான் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததை அறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து நிஷாந்தை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

இதையடுத்து அவர் திருச்சியில் தங்கி திருநங்கைகளுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார். தொடர்ந்து தனது பெயரையும் நிஷா என்று மாற்றிக் கொண்டு வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஹார்மோன் மாற்றத்தின் நிலையை கூறி பெற்றோரை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து அவர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நிஷாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடம் முடிந்த பிறகு திருநங்கைகள் சேர்ந்து சடங்கு செய்வது வழக்கம். அதன்படி நிஷாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பெண்களுக்கு செய்யும் மஞ்சள் நீராட்டு விழா போல் நிஷாவிற்கு அலங்காரம் செய்து கொண்டாடினர். இதில் அவரது பள்ளி தோழர்கள், உறவினர்கள் என பலர் வந்து வாழ்த்திச் சென்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vriddhachalam , viruthachalam, transgender
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு