பூச்சியூர் கோயிலில் மகா சிவராத்திரி விழா : ஆணி காலணி அணிந்து பூசாரி அருள்வாக்கு

பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன் பாளையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது பூச்சியூர் கிராமம். இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி வீரபத்திரசாமி, மகாலட்சுமி,வேட்டைக்காரசாமி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர் ஒன்று கூடி, இறைவனை வழிபடுவர்.  வழக்கம் போல சிவராத்திரியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு முழுவதும், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் பூசாரி வீரபத்திர சுவாமி முன்பாக கால்பாதங்களில் கூர்மையான ஆணிகள் உடைய மரக்கட்டையால் ஆன செறுப்பை அணிந்து ஊர்வலமாக வந்து இரண்டு புறமும் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறியபடி கோயிலை அடைந்தார்.

வேட்டைக்காரசாமி ஊர்வலத்தின் போது, பூசாரி வரும் பாதையில், பெண்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மனதில் வேண்டிய படி அருள்வாக்கு கேட்டால் விரும்பியது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த 13 ஆண்டுக்கு முன்பு முள் படுக்கை எனும் ஆணி காலணி அணிந்து, பூசாரி நடந்து செல்லும் போது பெண்கள் தரையில் படுத்து வேண்டுதல் செய்து வந்தனர். இதற்கு நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக யாரும் தரையில் படுப்பதில்லை.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறுகையில், கடந்த 400 ஆண்டுகளாக நடந்துவரும் இத்திருவிழாவில் வேண்டுதலுக்காக நடைபெறும் இந்நிகழ்ச்சியை தடை செய்ததை ரத்து செய்து பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோயில் விழாவில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: