×

மொகாலியில் கோஹ்லியின் 100வது போட்டி இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: வெற்றியுடன் தொடங்குவாரா புது கேப்டன் ரோகித்சர்மா?

மொகாலி: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் மொகாலியில் நாளை நடக்கிறது. இந்தியாவின் 35வது டெஸ்ட் கேப்டனாக ரோகித்சர்மாவின் தலைமையில் இந்தியா களம் காண்கிறது. விராட்கோஹ்லிக்கு இது 100வது டெஸ்ட் ஆகும். அவர் இதுவரை 99 டெஸ்டில் ஆடி 27 சதம், 28 அரைசதம் உள்பட 7,962 ரன் எடுத்துள்ளார். இன்னும் 38 ரன் எடுக்கும் பட்சத்தில் 8 ஆயிரம் ரன்னை கடந்த 6வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெறுவார். கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே இல்லாத நிலையில் ஆடும் லெவனில் இடம்பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித்சர்மாவுடன் கில் அல்லது மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவர். 3வது இடத்தில் விகாரி, 4வது இடத்தில் விராட்கோஹ்லி, 5வது இடததில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெறலாம். ரிஷப் பன்ட் 6வது இடத்தை தக்க வைத்துக்கொள்வார். சுழலில் ஜடேஜா, அஸ்வின், வேகத்தில் பும்ரா, ஷமி, சிராஜ் இடம்பெறலாம். வெற்றியுடன் தனது கணக்கை ரோகித்சர்மா தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மறுபுறம் இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் ஆடிய 2 டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று 100 சதவீத புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. கருணாரத்னே தலைமையிலான அணியில், சண்டிமால், மேத்யூஸ், திரிமனே, குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, அசலென்கா ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கலாம். பந்துவீச்சில் லக்மல், லகிரு குமாரா, வாண்டர்சே, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறலாம். இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது. மைதானத்தில் 12,500 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. இந்திய உத்தேச அணி: ரோகித் சர்மா(கே), கில் அல்லது அகர்வால், விகாரி, விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், ஜடேஜா, அஸ்வின், ஷமி, பும்ரா, சிராஜ்.

இந்தியா ஆதிக்கம்
இந்தியா-இலங்கை அணிகள் இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர் நடந்துள்ளன. இதில், 9 தொடரை இந்தியாவும், 3 தொடரை இலங்கையும் கைப்பற்றி உள்ளன. 4 தொடர் சமனில் முடிந்துள்ளது. இலங்கை 8 தொடரை இதுவரை இந்தியாவில் ஆடியதில் ஒருமுறைகூட கைப்பற்றியது கிடையாது. 2 முறை சமன் செய்துள்ளது. இந்தியாவில் இலங்கை இதுவரை 20 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் ஒன்றில் கூடி வெற்றிபெற்றது கிடையாது. 12ல் தோல்வி அடைந்துள்ளது. 8 டெஸ்ட்டை டிரா செய்துள்ளது.

மொகாலியில் இந்திய ரெக்கார்டு
மொகாலியில் இந்தியா இதுவரை 13 டெஸ்டில் ஆடி உள்ளது. இதில், 7ல் வெற்றி பெற்றுள்ளது. 1994ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மட்டும் தோல்வி கண்டுள்ளது. 5 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இங்கு கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்டிலும் இந்தியா வென்றுள்ளது. இலங்கைக்கு எதிராக 1997ல் ஒரே ஒரு டெஸ்ட்டில் ஆடியதில் டிராவில் முடிந்துள்ளது.

அதிக ரன், விக்கெட்...
இலங்கைக்கு எதிராக சச்சின் 25 டெஸ்ட்டில் ஆடி 9 சதத்துடன் 1995 ரன் எடுத்துள்ளார். இலங்கை தரப்பில் ஜெயவர்த்தனே 18 டெஸ்ட்டில் 6 சதத்துடன் 1822 ரன் அடித்துள்ளார். பந்துவீச்சில் முரளிதரன் 22 போட்டியில் 105 விக்கெட்டும், இந்திய தரப்பில் கும்ப்ளே 18 டெஸ்ட்டில் 74 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

கபில்தேவை முந்தும் அஸ்வின்
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 84 டெஸ்ட்டில்  430 விக்கெட் எடுத்துள்ளார். அவர் இன்னும் 4 விக்கெட் எடுத்தால் கபில்தேவை முந்துவார். கபில்தேவ் 131 டெஸ்ட்டில் 434 விக்கெட் எடுத்துள்ளார். இந்திய தரப்பில் கும்ப்ளே 619 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

Tags : Kohli ,India ,Sri Lanka ,Mokuli ,Rokitserma , Kohli's 100th match in Mogali, India-Sri Lanka
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...