அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க பெருகும் ஆதரவு!: சேலத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை..முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு..!!

சேலம்: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க ஓ.பி.எஸ்.-யிடம் தேனி நிர்வாகிகள் மனு அளித்த நிலையில் சேலத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்காத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நேற்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து பேசி உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனியில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ்.யிடம் வலியுறுத்தி இருந்தனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியும், அதிமுகவை சசிகலா அல்லது தினகரன் தலைமை ஏற்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 பேர் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. எனவே ஒற்றை தலைமையே தேவை என கூறியிருந்தார். இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கக்கூடிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோருடன் தற்போது அவரச ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில், இந்த அவசர ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய சிலர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது இந்த கருத்தை முக்கிய நிர்வாகிகள் பலரும் முன்வைத்து வருவதால் பலமுறை ஆலோசித்து அதன் பின்னரே இதன் மீதான நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

Related Stories: