×

திருச்சி தேசிய சட்டப்பல்கலை மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் 69 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருச்சி, தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின், மாணவர் சேர்க்கையில் 2022-23ம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையானது பொது சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு மூலம் நடக்கிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கென ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்களில் 45% இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களாலும் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மற்றும் 5% இடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கான இடங்களை பொறுத்தமட்டில், அவை தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி பூர்த்தி செய்யப்படுகிறது. 50% அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களை பொறுத்தமட்டில் 15% இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் 7.5% இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் மீதமுள்ள 77.5% இடங்கள் பொதுமுறை போட்டியிலும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இருப்பினும், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களுள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென தனியே இடஒதுக்கீடு ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மேற்சொன்ன சூழலை கவனமுடன் கருத்தில்கொண்டு, விரிவான பரிசீலனைக்குப் பின் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 50% இடங்களையும் தமிழ்நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டு வரும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையான 69% பின்பற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுள் அவர்களுக்கு அதிகபட்சமாக 50% இடங்களை உறுதி செய்து நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tiruchi ,National ,Tamil Government , Trichy National Law University, Admission, All India Quota, Government of Tamil Nadu,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...