×

உக்ரைனில் 7வது நாளாக பயங்கர போர் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி: கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா; குண்டு வீச்சில் கார்கிவ் நகரம் நாசம்

கார்கிவ்: உக்ரைனில் 7வது நாளாக கடுமையாக போர் நடந்து வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு இந்திய மாணவர் பலியாகி உள்ளார். உடல் நலக்குறைவு காரணத்தால் அவர் பலியாகி இருப்பதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரம், கெர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கார்கிவ் நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து வருவதால், அந்த நகரம் நாசமாகி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் 7வது நாளாக நேற்றும் கடும் தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே, பல்வேறு ராணுவ தளங்களை அது கைப்பற்றி விட்டது.

தற்போது, முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குகிறது. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கெர்சன் நகரம் அதனிடம் வீழ்ந்தது. அடுத்ததாக, கார்கிவ் நகரை குறிவைத்துள்ள ரஷ்ய படையினர் நேற்று முன்தினம் இரவில் வான்வழி தாக்குதலை நடத்தினர். பல ஏவுகணைகள் வீசப்பட்டு அரசு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கார்கிவ் நகரில் உள்ள பல அரசு அமைச்சக கட்டிடங்கள் குண்டுவீச்சில் நாசமாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் ரஷ்யா வான்வழியாக கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் நகரம் முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, அங்குள்ள இந்திய மாணவர்கள் எப்படியாவது, நடந்தாவது எல்லை தாண்டி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென இந்திய தூதரகம் நேற்று அறிவுறுத்தியது.

கார்கிவ் நகரம் முழுவதுமே ஏவுகணையால் இடிந்து உடைந்த கட்டிடங்கள், தீப்பிடித்து எரியும் குடியிருப்புகள் என சர்வ நாசமாகி உள்ளது. கார்கிவ்வில் அதிபயங்கரமான தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய தரப்பிலிருந்து ஒன்றிய அரசுக்கு நேற்று தகவல்கள் கிடைத்தன. இதனால் அங்கிருந்து மாணவர்கள் உடனே வெளியேற உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்ததுக்க. இதற்கிடையே, நேற்று முன்தினம் ரஷ்யாவின் குண்டுவீச்சில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் இறந்த நிலையில், உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற 20 வயது மாணவன் மேற்கு மத்திய உக்ரைனில் உள்ள வின்னைட்சியா தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இவருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சந்தனின் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த மாதம் 7ம் தேதி அவரது தந்தையும், சகோதரரும் உக்ரைன் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மட்டும் சமீபத்தில் திரும்பிய நிலையில், சந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவலை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது.

உக்ரைனில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியை ஒன்றிய அரசு விரைவுபடுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 விமானம் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 விமானங்கள் மூலம் 3,352 பேர் நாடு திரும்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இதுவரை 17,000 இந்திய மாணவர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறி இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மீதமுள்ள சுமார் 1,000 மாணவர்கள் போர் நிலவும் பகுதிகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்பதில் கடும் சிரமம் நிலவி வருவதால், அவர்களின் கதி என்னவாகும் என கவலை எழுந்துள்ளது. இதற்கிடையே, உக்ரைனில் படித்த மாணவர்கள் போலந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலமாக தங்களின் மருத்துவ படிப்புகளை முடிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு  பெரும் நிம்மதியை தந்துள்ளது.

* அணு ஆயுத போராக 3ம் உலகப்போர் இருக்கும்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் அணு ஆயுதங்களை பெற்றால், அது உண்மையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 3ம் உலகப் போர் ஏற்பட்டால் அது அணு ஆயுத போராக பயங்கர சேதங்களை விளைப்பதாக இருக்கும்’’ என்றார். கடந்த இரு தினங்களுக்கு முன், அணு ஆயுத படையை உஷார் படுத்தி அதிபர் புடின் உலக அளவில் பீதியை உண்டாக்கிய நிலையில் ரஷ்யா 2வது முறையாக அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Terror War ,Ukraine ,Russia ,Kersen City ,Kharkiv , 7th Day of Terror War in Ukraine Another Indian Student Killed: Russia Occupies Kersen City; The bombing destroyed the city of Kharkiv
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...