×

விசிக உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற திருமாவளவன்: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கிற்கு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்..!!!

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கிற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அனைத்து உறுப்பினர்களுக்குமான பதவியேற்பு விழா நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் உறுப்பினர்களுக்கு ஆணையர் ககந்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விசிக சார்பில் 4 உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

சாதாரண தொண்டனின் பதவியேற்பு நிகழ்வை கண்டு சந்தோஷம் அடையும் தலைவன், தாயுமானவர் என நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்றது குறிப்பிடதக்கது. இதுகுறித்து விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசுகையில், எங்க தலைவர் முதல் நாள் மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடும் தந்தை போல எங்களை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றார் என்று பேசி வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மாமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 200 பேர் கொண்ட அவையாக விரிவாக்கம் செய்திருக்கும் நிலையில் இந்த அரங்கம் போதுமானதாக இல்லை. ஏற்கெனவே 155 பேர் கொண்ட அவையாக இருந்த நிலையில், தற்போது 200 பேராக அதிகரித்து உள்ளது. எனவே பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய கட்டிடமாக சென்னை மாமன்றம் கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகளுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

இன்று நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கான உறுப்பினர்களாக ஏறத்தாழ 140க்கும் மேற்பட்டோர் பதவியேற்றுள்ளனர்; எனவே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு மகத்தான அங்கீகாரத்தை வழங்கிய தமிழக வாக்காள பொதுமக்களுக்கு தனது நன்றி என கூறியதோடு, அவர்களுக்கான நம்பிக்கை பாத்திரமாக எங்களது இயக்கம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.     


Tags : Thirumavalavan ,Vizika ,Chennai Corporation Council , Vizika, Position, Thirumavalavan, Chennai, Assembly Hall, New Building
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு